எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா
கல்வி கற்குதல், வேலைக்குச் சென்று சம்பாதித்தல், அன்னிய ஆடவர்களோடு பழகுதல், விரும்பிய ஆடைகளை அணிந்து விரும்பியவாறு நடந்து கொள்ளுதல் போன்ற பெண்ணுரிமைகளை இஸ்லாம் மறுக்கின்றன.
முஸ்லிம் அல்லாதோர் பிற மதக் கோவில்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று அங்கு நடைபெறும் வழிபாடுகளிலும், விழாக்களிலும் பங்கெடுத்துக் கொண்டு பிரசாதங்களை வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ச்சியை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்வது போல் முஸ்லிம்கள் அவ்வாறு நடந்து கொள்வதை இஸ்லாம் மறுக்கிறது.
1. ஆடு,மாடு கோழி போன்ற உயிரினங்களை துடிக்கத்துடிக்க அறுத்து சாகடிப்பது, உயிரினங்களை வதைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்களை இஸ்லாம் ஊக்குவிக்கிறது.
2. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை விருப்பம் போல் திருமணம் செய்வதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
3. இஸ்லாத்தை ஏற்காத முஸ்லிம் அல்லாதோரை கண்ட இடங்களில் கொலை செய்ய வேண்டும் என்றும் பிறமதக் கோட்பாடுகளையும் பிற மதத்தவர்களையும் சகித்துக் கொள்ளாத மதமே இஸ்லாம் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முஸ்லிம் அல்லாதோர் தொடுக்கின்றனர்.இன்னும் இது போன்ற எத்தனை குற்றச்சாட்டுகள் இஸ்லாத்தை நோக்கி வீசப்பட்டாலும் அத்தனைக்கும் இஸ்லாம் அறிவுப்பூர்வமான ஆதாரப்பூர்வமான பதில்களை அள்ளி வீசுகிறது. அவற்றில் தற்போத முக்கியமான குற்றச்சாட்டுகளுக்குரிய பதில்களை தெரியக் கடமைப்பட்டுள்ளோம்.
4. தமிழகத்து நடிகர் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 100 கோடிக்குத் தயாரித்து படமாக்கிய விஸ்வரூபம் முஸ்லிம்களை கொதிப்படைய வைத்துள்ளது.
5. திருக்குர்அன் தீவிரவாத்தின் பிறப்பிடமாக உள்ளதால் முஸ்லிம்கள் தீவிரவாதியாகத் திகழ்கின்றனர். ஆதலால்தான் ஆங்காங்கே குண்டகள் வெடிக்கின்றன.கொலைகள் சர்வசாதாரணமாக அரங்கேறுகின்றன. தாடியோடு உள்ள முஸ்லிம்களை பார்க்கிற போதே ஒரு விதமான அச்சம் கவ்விக் கொள்கிறது என்பன பொன்ற நச்சுக் கருத்துக்களை ஊடகங்கள் மூலமாக விதைக்கப் பார்க்கிறார்கள்.
6. இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரமாகவும் முஸ்லிம்களின் உயிர் மூச்சாகவும் திகழ்கின்ற உலகப்பொதுமறை அல்குர்ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? அது தீவிரவாதத்தின் பிறப்பிடமாக உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு உரிய பதிலை விரிவாகக் காண்போம்.
நபியவர்கள் எதிரிகளைக் கொன்று நாட்டை கைப்பற்றுவதற்காக யுத்தம் செய்தார்கள்?
நபியவர்களும் 300க்கும் மேற்பட்ட அவரது தோழர்களும் மக்காவில் இருந்து புறப்பட்டு மதீனாவிற்கு அருகில் உள்ள பத்ர் என்ற இடத்தில் யுத்தம் செய்தனர். எதிரிகள் ஆயிரம் பேர் கொண்ட படையை திரட்டிக் கொண்டு பல நாட்கள் யுத்தம் செய்வதற்கு தயாராக வந்து படுதோல்வியை சந்தித்தனர். அற்பமான எண்ணிக்கையைக் கொண்ட நபியவர்களும் தோழர்களும் வெற்றி கொண்டனர். இது பத்ருப்போர் என்று இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படுகிறது.
எதிரிகளைக் கொன்று நாடு பிடிப்பது நோக்கம் என்றால் நபியவர்களும் அவரது தோழர்களும் படை திரட்டி மக்காவிற்கே சென்று போரிட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் மதீனாவிற்கு மிக அருகில் உள்ள பத்ர் எனும் இடத்தில் தான் போரிட்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? மக்காவிலிருந்து ஏறத்தாழ 300 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பத்ர் எனும் இடத்திற்கு மக்காவின் எதிரிகள் படை திரட்டி வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தவில்லையென்றால் மதீனாவிற்குள்ளேயே புகுந்து இங்கிருக்கின்ற மக்களை கொன்று குவித்து விட்டால் நம் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களின் கதி என்ன ஆவது? என்ற தற்காப்புக் காரணத்திற்காகத்தான் இருக்கின்ற தோழர்களை அழைத்துக் கொண்டு பத்ர் களத்தை சந்தித்தார்கள்.
நாடு பிடிப்பதும், கொள்ளையடிப்பதும் நோக்கமானால் தோல்வியுற்று ஓடுகின்;ற மக்கா எதிரிகளை விரட்டிச் சென்று அவர்களை கொன்று குவித்து விட்டு அவர்களை பின்தொடர்ந்து போய் மக்காவையே கைப்பற்றியிருக்க வேண்டும். மக்காவை அவர் கைப்பற்றியிருந்தால் எவரும் அதை குறை காண முடியாது காரணம் மக்கா அவரது சொந்த ஊராகும். அவ்வாறு செய்யாததில் இருந்தே நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகின்றது.
கொள்ளையடிப்பதற்காகவா?
மக்கா எதிரிகளை பத்ரு களத்தில் வெற்றி கொண்ட பிறகு மக்காவை விட்டுவிட்டு வந்த எதிரிகளுடைய வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்திருக்க வேண்டும் அல்லது மக்காவில் உள்ள வளங்களை கொள்ளையடித்திருக்க வேண்டும் அப்படி ஒரு நோக்கம் அவருக்கும் அவருடைய தோழர்களுக்கும் இருக்கக்கூடாது என்பதற்கான இறைக் கட்டளையைத்தான் திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகிறது.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (தற்காப்பு) யுத்தத்திற்குப் புறப்பட்டால் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். உங்களை நோக்கி சமாதானம் கூறியவரிடம் இவ்வுலக பொருட்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நீர் விசுவாசி அல்ல என்று நீர் அவரிடம் கூற வேண்டாம். அல்லாஹ்விடம் (இதை விடச் சிறந்த) அதிகமான செல்வங்கள் உள்ளன. (அல்குர்ஆன் 4:94)
பழி தீர்க்கவா?
மக்கா எதிரிகள் நபியவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் கொடுத்த தொல்லைகளுக்கெல்லாம் பழி தீர்க்கவா அவர்களிடம் யுத்தம் செய்தார்கள்? அவ்வாறில்லை! மக்காவை துறந்து மதீனா சென்ற நபியவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நபித்தோழர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு மக்கா நோக்கிச் சென்றார்கள். ஒப்பந்தத்தை மீறிய மக்கா எதிரிகளிடம் கத்தியின்றி இரத்தமின்றி அறவழி யுத்தம் செய்த நபியவர்களிடம் மக்கா எதிரிகள் சரணடைந்தார்கள். தனக்கும் தன் தோழர்களுக்கும் தொல்லை கொடுத்த எதிரிகளை பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நபியவர்கள் மக்கா எதிரிகளுக்கு பொது மன்னிப்பு அளித்திருக்க மாட்டார்கள் இதற்கும் இறைக்கட்டளை தான் காரணம்.
ஒரு கூட்டத்தினர் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு அவர்களிடம் நீங்கள் நீதியுடன் நடக்காமல் இருக்கச் செய்ய வேண்டாம். நீதியுடன் நடங்கள். அது தான் இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை பயந்து கொள்ளுங்கள். அவன் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான். (அல்குர்ஆன் 5:8)
யுத்தக் களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடந்ததை பார்த்த நபியவர்கள் ஆட்சேபித்து பெண்களையும் சிறுவர்களையும் கொல்லாதீர்கள் என்று தடை விதித்தார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 3014,3015)
போர்களத்தில் போரிடுங்கள் வரம்பு மீறாதீர்கள். சிறுவர்களையும் மதகுருமார்களையும் கொல்லாதீர்கள் என்று நபியவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்: முஸ்லிம்)
யுத்தக் களத்தில் நியாயம், அநியாயம் எதுவும் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது உலகில் எழுதப்படாத விதியாக அன்றிலிருந்து இன்று வரை உள்ளது. இங்கனம் இருக்க தர்ம யுத்தத்திலும் யுத்த தர்மத்தை புகுத்தியவர் தான் இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் அப்படியென்றால் அவருக்கு பழிதீர்க்கும் எண்ணம் எப்படியிருக்கும்?
எதிரிகளை மதம் மாற்றவா?
முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களாக மாற்றுவதற்காகவா நபியவர்கள் வாளேந்தினார்கள்? மனித மனங்களில் கொள்கை திணிப்பு நிர்பந்தத்தால் நிலைத்திருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சாதாரண இந்த அறிவு கூட இறைத்தொடர்பு உள்ள இறைத்தூதருக்கு இல்லாமலா போனது? இல்லை. இறைவனும் திருக்குர்ஆனும் கொள்கைத் திணிப்பை ஒரு கட்டத்திலும் அறிவுறுத்தவும், அனுமதிக்கவும் இல்லை.
இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)
உண்மை உம் இறைவனிடம் இருந்து வந்ததே. விரும்பியவன் இதை ஏற்கட்டும், விரும்பியவன் இதை மறுக்கட்டும். (அல்குர்ஆன் 18:29)
மதீனாவில் நபியவர்கள் தன்னை ஆட்சியாளராக பிரகடனப்படுத்திய பிறகும் முஸ்லிம் அல்லாதோர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் கொள்கை திணிப்பை கொள்கையாக கொண்டிருந்தால் இவர்களிடம் அதை செய்திருப்பார்கள். அதை அவர்கள் மறுக்கிற போது அவர்களிடம் யுத்தமே செய்திருப்பார்கள். மாறாக அவர்களுடைய விருப்பத்திற்கே விட்டு விட்டார்கள். முஸ்லிம்களுக்குரிய சலுகைகள் முஸ்லிம் அல்லாதோருக்கு வேண்டுமென்றால் அவர்கள் வரி கட்டி வாழ்ந்து கொள்ளட்டும் என்றார்கள்.
இறைவனுக்கு இணை வைப்பவர்களில் (முஸ்லிம் அல்லாதவர்கள்) எவரேனும் உங்களிடம் அடைக்கலம் கேட்டு வந்தால் இறைவனின் வார்த்தையை அவர் செவியேற்பதற்காக அடைக்கலம் கொடுங்கள். பிறகு அவருக்கு பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் சேருங்கள் ஏனென்றால் அவர்கள் அறியாத மக்கள். (அல்குர்ஆன் 9:6)
இது இறைத்தூதரின் தூய சிந்தனைக்கும் திருக்குர்ஆன் ஒப்பற்ற இறைவேதம் என்பதற்கும் ஓர் நற்சான்றாகும். அதாவது கொள்கை திணிப்புக்காக மற்றவர்களிடம் யுத்தம் செய்வதற்கு அனுமதியில்லை என்பதற்கு ஆதாரமாகும்.
ஏன் இந்தப் போர்கள்?
இறைத்தூதர் முஹம்மது அவர்கள் தன் வாழ்க்கையில் யுத்தமே செய்யாமல் சுத்த சைவமாகத்தான் வாழ்ந்தார்களா? இல்லை. அவரும் தர்ம யுத்தம் செய்திருக்கிறார். மக்காவில் வாழ்ந்த இறைத்தூதரும் முஸ்லிம்களும் மக்கா எதிரிகளுடைய பல தெய்வ கொள்கை கோட்பாட்டை மறுத்ததற்காக அவர்களுடைய சொந்த ஊரிலிருந்தே மதீனாவுக்கு அடித்துத் துரத்தப்பட்டார்கள். மதீனா சென்று தஞ்சம் புகுந்தவர்களை அங்கும் படையெடுத்துச் சென்று கருவறுக்க நினைக்கும் மக்கா எதிரிகளை என்ன செய்வது? தன்னையும் தன் தலைமையை ஏற்றுக் கொண்ட சமூகத்தையும் காக்க வேண்டிய கடமை ஒரு சமுதாய, ஒரு நாட்டுத் தலைவனுக்கு இல்லையா? அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகத்தான் நபியவர்கள் போர்களைச் சந்தித்தார்கள். வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல.
நியாய உணர்வுள்ள, நாட்டு நலனிலும் குடிமக்கள் நலனிலும் அக்கறையுள்ள எவரும் இதை குறை காண மாட்டார். இதற்கு இரண்டு யுத்தங்களைச் சான்றாகக் கொள்ளலாம். ஒன்று முன்னர் குறிப்பிடப்பட்ட பத்ர் யுத்தம். பத்ர் என்பது மதீனாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து 300 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. நபியவர்கள் வலிய யுத்தம் செய்ய வேண்டும் எதிரிகளை கொன்று குவிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவராக இருந்தால் அவர் மக்கா நோக்கிப் படையெடுத்திருக்க வேண்டும். மாறாக மதீனா நோக்கிப் படையெடுத்தவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் மதீனா அருகில் உள்ள பத்ரை நோக்கிப்படையெடுத்தார்கள்.
அதுபோல இரண்டாவது உஹது யுத்தத்தையும் சான்றாகக் கொள்ளலாம். உஹது என்பது மதீனாவில் இருந்து ஐந்து மைல் தொலைவில் அமைந்திருக்கிற மலையின் பெயராகும். இது மக்காவில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ளது. மக்கா எதிரிகள் இத்தனை கிலோமீட்டர் தொலைவில் இருந்து உஹது மலை அடிவாரம் வரை வந்துவிட்டால் மதீனாவுக்குள்ளேயே புகுந்து விடுவார்கள் என்ற காரணத்தினால் நபியவர்கள் மதீனாவிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள உஹது மலையடிவாரத்திற்கே சென்று எதிரிகளிடம் யுத்தம் செய்தது வலியச் சண்டைக்குச் சென்றதா? வந்த சண்டையை தடுத்து நிறுத்தியதா?
இன்று நம் நாட்டை தாக்குவதற்காக அண்டை நாட்டினர் படை திரட்டி வந்தால் ஆள்வோர் கண்டு கொள்ளாமல் இருப்பார்களா? நம்மையும் நம் நாட்டு மக்களையும் காப்பதற்காக களம் காணமாட்டார்களா? இதைத்தானே நபியவர்கள் செய்தார்கள். நியாய உள்ளம் கொண்ட எவரும் இதை குறை சொல்ல முடியாதே!
மதீனாவை ஆண்ட நபியவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும் மக்கா எதிரிகளும் மதீனாவுக்கு அப்பால் உள்ள எதிரிகளும் தொல்லை கொடுத்து வந்தனர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு இறையாண்மை உண்டு. அவ்விறையாண்மையை இவர்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும்; மீறினர். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் பொதுவாக பேணப்பட வேண்டிய இறையாண்மை மீறப்படுகிற போது மீறிய நாட்டின் மீது மீறப்படுகிற நாட்டினர் அவர்களிடம் யுத்தம் செய்து இறையாண்மையைப் பாதுகாப்பது எல்லோராலும் ஏற்கப்படக்கூடிய ஒன்றே. அதைத்தான் நபியவர்களும் செய்தார்கள்.
நபியவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற போது மக்கா எதிரிகளால் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மக்காவாசிகளின் இறையாண்மையைக் காக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மக்கா சென்று வழிபாடு செய்ய வேண்டிய நபியவர்கள் மதீனா திரும்பிவிட்டார்கள் என்பதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
ஒரு நாட்டில் உள்ள குடிமக்கள் ஆள்வோரால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகிற போது அண்டை நாட்டின் ஆட்சியாளார்கள் யாரும் இதை கண்டு கொள்ளமால் இருக்க இயலாது. நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் இன்றி அடக்கு முறைகளுக்கு ஆளான மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களுக்கு இருக்காதா? அதற்காக அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக களம் இறங்கினால் அது கலகமா? மட்டுமல்ல அடக்கு முறைகளுகு;கு ஆளான மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு எங்களை காக்க யாரும் இல்லையா? என்று ஏங்குகிற போது அதற்காக படையெடுப்பது அநியாயமா? இந்த நியாயத்தைத்தான் நபியவர்களும் நிலை நிறுத்தினார்கள்.
உங்களுக்கு அநியாயம் செய்யப்படுகிறது என்பதற்காக போரிடுபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவுவதற்கு ஆற்றல் உள்ளவன். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து எங்கள் இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்கு அநியாயமாக வெளியேற்றப்பட்டனர். (அல்குர்ஆன் 23:39)
ஒவ்வொரு நாட்டினரும் அதை ஆள்வோரும் தங்கள் நாட்டின் வளத்தை காக்க, பெருக்க அண்டை நாட்டினரோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்வதுண்டு. அந்த ஒப்பந்தங்கள் மீறப்படுகிற போது மீறிய நாட்டினர் மீது படை திரட்டுவது வாடிக்கையான ஒன்றே. அதைத்தான் நபியவர்களும் செய்தார்கள்.
மதீனாவுக்கு அப்பால் வாழ்ந்த யூத இனத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியவர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் அவர்கள் மீறியுள்ளனர் எனில் இப்படிப்பட்டவர்களிடம் சும்மாவா இருக்க முடியும். இந்த அக்கிரமத்திற்கு எதிராகத்தான் நபியவர்கள் களம் இறங்கினார்கள் என்றால் இது எங்கனம் தவறாகும்.
ஒரு நாட்டில் அம்மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அந்நாட்டை ஆள்வோரால் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளும் கடமைகளும் ஆள்வோரால் மீறப்பட்டு அந்நாட்டின் வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனால் அந்நாட்டில் குடியிருக்கும் சிறுவர்களும் பெரியவர்களும் பெண்களும் சொல்லிக் கொள்ள முடியாத துயரத்திற்குள்ளாக்கப்படுகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற அண்டை நாட்டினர் சும்மாவா இருக்க முடியும். அதைத்தான் நபியவர்கள் செய்தார்கள்.
பலவீனமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் எங்கள் இறைவனே இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பாளரை எங்களுக்கு ஆக்குவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
(அல்குர்ஆன் 4:75)
யாராவது தங்களை காக்க ஓடோடி வரமாட்டார்களா? என்று அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களே எதிர்பார்க்கிற போது அந்த அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக நியாய உணர்வுள்ள ஆட்சியாளன் போரிடுவது எங்கனம் தவறாகும். மேற்கூறிய வசனம் வலியுறுத்துவதைத்தானே நபியவர்களும் செய்தார்கள். பாகிஸ்தானின் அடக்குமுறைகளுக்கு ஆளான பங்களாதேஷத்தினரை காக்க இந்தியா தன் ராணுவத்தை அனுப்பியதும் பங்களாதேஷ் என்ற நாட்டை அமைத்ததும் எங்கனம் தவறாகும். இலங்கையில் உள்ள தமிழர்களை காக்க அண்டை நாடான இந்தியா படை அனுப்பியதும் மாலத்தீவு என்ற அந்நிய நாட்டை சுரண்டத் துடித்த அந்நியர்களிடமிருந்து அதிரடியாக இந்தியா அதிரடிப்படையை அனுப்பி அதை மீட்டுக் கொடுத்ததுவெல்லாம்; நியாயங்களாக பார்க்கப்படுவது போல் நபியவர்கள் செய்தது மட்டும் அநியாயங்களாக பார்க்கப்படுவது ஏன்?
நியாயத்திற்கும் தர்மத்திற்கும் மட்டும் கட்டுப்பட்டவர்களாக நபியவர்கள் வாழ்ந்ததற்கு எது காரணம்? அவர்களை வழிநடத்திய உலகப் பொதுமறை அல்குர்ஆன் அல்லவா காரணம்.
அல்குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களை கண்ட இடங்களில் கொல்லச் சொல்கிறதே? இந்த அநியாயத்தை மட்டும் குர்ஆன் அங்கீகரிக்கிறதா? என்று சிலர் கேட்கிறார்கள்? இது குறித்தும் நாம் தெரிய கடமைப்பட்டுள்ளோம்.
அவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது. கஅபா ஆலயம் அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்களும் போர் செய்யாதீர்;கள். அவர்கள் உங்களுடன் போர் செய்தால் அவர்களுடன் நீங்களும் போர் செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:191)
குர்ஆனின் வசனங்களை படித்து விளங்கிக் கொள்கின்றவர்கள் அதற்கு முன் பின் வசனங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்துதான் விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனத்தில் ''அவர்களிடம்'; என்ற வார்த்தையை முஸ்லிம் அல்லாத அனைவரிடமும் என்று பொதுவாக புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக அவர்களிடம் என்றால் எவர்களிடம் என்பதை முந்தைய வசனத்தை படிப்பதின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
உங்களுடன் போருக்கு வருபவர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் (அறவழியில்) நீங்களும் போரிடுங்கள் வரம்பு மீறி விடாதீர்;கள். நிச்சயமாக வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் (அல்குர்ஆன் 2:190)
குர்ஆன், வம்புச் சண்டைக்கு வந்தவர்களுடன் தான் போரிடுங்கள் என்று முஸ்லிம்களிடம் கூறுகிறதேயொழிய வலியச் சண்டைக்கு அவர்களைத் தூண்டவில்லை. முந்திய வசனத்தை மறைத்து விட்டு பிந்திய வசனத்தை மட்டும் சிலர் எடுத்துக் காட்டுவதால் இச்சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரு நாட்டினருடன் இன்னொரு நாட்டினர் அல்லது ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாக சண்டைக்கு வந்தால் அவர்களை எதிர்த்து சண்டை செய்வதில் என்ன தவறு? எந்த அரசாவது, எந்த சமூகமாவது தன்னுடன் வலியச் சண்டைக்கு வரக்கூடியவர்களிடம் சண்டையிடாமல், போரிடாமல் இருக்குமா? அவ்வாறு நடக்கும் சண்டையிலும் போரிலும் வரைமுறைகள் எதுவும் பேணப்படாமல் தாக்குவது தானே உலக நடைமுறை. அதைக்கூட குர்ஆன் அங்கீகரிக்கவில்லை. மாறாக அது போருக்கென தர்மத்தை வகுத்தளித்தது. பார்க்க: அல் குர்ஆன் 2:190)
தற்காப்பு தர்மயுத்திலும் கூட யுத்த தர்மத்தை பேணச் சொல்லும் அல்குர்ஆனின் இந்த அறிவுரையை நியாய உணர்வுள்ள எவரும் பாராட்டத்தான் செய்வார்கள். இங்கனம் இருக்க முஸ்லிம் அல்லாதோரை வெட்டி வீழ்த்துங்கள் என்ற அதர்மக் கருத்தை குர்ஆன் கூறுமா?
முஸ்லிம் அல்லாதோரிடம் போர் செய்வது குறித்தும் அவர்களை கண்ட இடத்தில் கொலை செய்வது குறித்தும் குர்ஆனில் இடம்பெற்ற வசனங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் அதன் நிலை இதுதான். பார்வைக்காக சில வசனங்கள்:
அல்குர்ஆன் 2:193,194,217,246 4:75,71,76,90,91 5:33 8:39
எனவே திருக்குர்ஆன் மனித நேயத்தைத்தான் போதிக்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் தீவிரவாதத்தை அது ஆதரிக்கவில்லை. மாறாக அதை வலிமையாக எதிர்க்கவே செய்கிறது.
எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவர் ஒருவர் ஒரு மனிதனை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்... (அல்குர்ஆன் 5:32)
0 comments:
Post a Comment