بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரமலானுக்குப் பிறகு.....


அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல!  அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது.  நாம் பாராத புதுப் புது முகங்கள்!  அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்!
ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது.  இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!  குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இரவை ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக ஆக்கி வைத்தான்.  இம்மாதத்தில் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவோருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாக வாக்களித்தான்.  அதன் பலனை சிம்பாலிக்காக வெளிப்படுத்தும் விதமாக சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை மூடினான்.
இதனால் கொஞ்ச நஞ்ச ஈமானிய உணர்வு உள்ளவர்களும் இம்மாதத்தில் அல்லாஹ் அளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற வேண்டி படையெடுத்து வந்தார்கள்.  உண்மையில் ரமளான் இவர்களை இரவிலும் பகலிலும் சிறைப்படுத்தி வைத்திருந்தது.
அந்த வகையில் ரமளான் அவர்களைக் கைது செய்து, நற்பண்புகளைப் போதித்த ஒரு சிறைச்சாலை!
நல்ல பாடங்களைப் படித்துக் கொடுத்த ஒரு பாடசாலை!
இறையச்சத்தில் ஊனமாகிப் போய் கிடந்த சகோதரர்களை இறையச்சத்தின் பக்கம் நடை பயில வைத்த நடை வண்டி!
இந்த ரமளான் மாதத்தில் பெற்ற பண்புகள் என்ன? பாடங்கள் என்ன? என்று பார்ப்போம்.
ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம்.  இரவு நேரங்களில் தொழுதோம்.  சப்தங்கள் அடங்கிப் போன ஸஹர் நேரத்தில் விழித்து பிரார்த்தனை செய்தோம்.
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோரகவும் (இருப்பார்கள்) (அல்குர்ஆன் 3:17)
இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:17,18)
என்று அல்லாஹ், சுவனத்திற்குரிய முஃமின்களின் பண்புகளைக் கூறுவது போன்று குறைவாக உறங்கி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினோம்.  இவற்றை ஏன் செய்தோம்?  நன்மையை நாடித் தானே செய்தோம்?  இதே காரியத்தை நாம் ரமளானுக்குப் பின்னாலும் தொடர்ந்து செய்தால் என்ன?  இவ்வாறு நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.
இந்த அமல்கள் அடுத்த ஆண்டு வரை அல்ல!  ஆயுள் வரை தொடர்வோம்.
ரமளானின் பகல் காலங்களில் அனுமதிக்கப்பட்ட உணவு, பானத்தை சாப்பிட மறுத்தோம்.  ஏன்? அல்லாஹ் தடுத்திருக்கின்றான் என்பதால் தானே!  அப்படியாயின் வட்டி, லாட்டரி, லஞ்சம், மது, சூது, திருட்டு, கொள்ளை, மோசடி இவற்றின் மூலம் வரும் வருவாயை நாம் சாப்பிடலாமா?
நோன்பின் பகல் காலத்தில் தடை பிறப்பித்த அல்லாஹ் தானே இவற்றின் மீது எந்தக் காலத்திலும் தடை விதித்திருக்கின்றான்.  இதுபோன்ற காரியங்களில் நாம் ஈடுபடலாமா? என்பதை உணர்ந்து விலகவே ரமளான் என்ற பள்ளிக்கூடம் நம்மிடம் பாடம் நடத்த வந்தது.  இந்தப் பாடத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடர்வோம்.
அருகில் அனுமதிக்கப்பட்ட மனைவி படுத்திருக்கின்றாள். அக்கம் பக்கத்தில் யாருமில்லை.  இருந்தும் ரமளானின் பகலில் நோன்புக் காலத்தில் நாம் நெருங்கவில்லையே! ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தானே!  ரமளான் மறைந்த பின் அல்லாஹ் பார்க்காமல் மறைந்து போய் விடுவானா?  நிச்சயமாக மறைய மாட்டான். அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
நாம் இங்கே படித்த பாடம் நம் மனைவியை ரமளானில் பகல் காலங்களில் நாம் நெருங்காத போது, பிறன் மனையை ஏறிட்டுப் பார்க்கலாமா? அந்நியப் பெண்களைப் பார்க்கலாமா? பெண்களின் அங்க அவயங்களை குளோஸ்அப்பில் காட்டும் டிவி, சினிமாக்களைப் பார்க்கலாமா?
ரமளானில் பார்த்துக் கொண்டிருந்த அதே ரப்புல் ஆலமீன் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற பாடம் நம்மிடம் அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடரட்டும்!
உளூச் செய்கின்றோம். அப்போது தாகத்தால் நாம் தவித்துக் கொண்டிருக்கும் போது வாய் கொப்பளிக்க சுவையான தண்ணீரை வாயில் அனுப்புகின்றோம்.  தொண்டைக் குழிக்குள் அந்தத் தண்ணீர் இறங்குவதற்கு ஒரு மயிரிழை அளவு தான் இருக்கின்றது.  ஒரு சொட்டு தண்ணீர் இறங்கினால் யாருக்குத் தெரியப் போகின்றது? ஏன் விழுங்கவில்லை? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தான்!
அனுமதிக்கப் பட்ட பானத்தையே ரமளானில் பகல் காலத்தில் பருகவில்லையே!  ரமளான் முடிந்த பின்னர் தடுக்கப்பட்ட மது பானங்களை அருந்தலாமா? ரமளானில் பார்த்த அதே நாயன் தான் இப்போதும் பார்க்கின்றான்.  அதனால் ரமளானைப் பாடமாகக் கொண்டு தடை செய்யப் பட்ட பானங்களை ஆயுள் முழுவதும் தொடாமல் விலகுவோமாக!
சங்கிலித் தொடராக புகை பிடிப்பவர்கள், நோன்பு நோற்றதிலிருந்து நோன்பு துறக்கும் நேரம் வரை பீடி, சிகரெட் புகைப்பதில்லை.  உயிர்கொல்லியான இந்த நெருப்புக் கொள்ளிக்கட்டையை வாயில் வைக்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற காரணம் தானே!  அதே காரணம் ரமளானுக்குப் பிறகு அறுந்து போகுமா?
நோன்பு நோற்கும் போது பார்க்கும் அந்த அல்லாஹ் தான் நோன்பு துறந்த பின் இரவு நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.  ரமளான் முடிந்த பின்னரும் அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதால் நோன்பு நோற்கும் போது புகைப் பழக்கத்தை விட்ட நாம் இப்போதும் அதே இறையச்சத்துடன் விட முடியாதா? முயற்சி செய்தால் முடியும்.  எனவே புகைப் பழக்கத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை விட்டொழிப்போமாக!
ரமளானில் ஏழைக்கு இரங்கினோம். அனாதைகளை அரவணைத்தோம்.  உறவினர்களுக்கு உதவி செய்து அவர்களிடம் ஒன்றிணைந்தோம்.  ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்று தானே!  ரமளான் முடிந்த பிறகும் அந்தக் காரணம் தொடரும் போது நாமும் இந்த நன்மைகளை ரமளானுக்குப் பிறகு அடுத்த ரமளான் வரை என்றில்லாமல் ஆயுள் வரை தொடர்வோம்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்.  யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும் என்ற புகாரி 1904வது ஹதீஸின் படி நோன்புக் காலத்தில் யாரேனும் நம்மிடம் சண்டைக்கு, வம்புக்கு வந்தால் விலகி விடுகின்றோம். ஏன்? ஒரு தரப்பு இறங்கிப் போகின்ற போது எதிர் தரப்பு ஏறுவது கிடையாது.  எகிறிக் குதிப்பது கிடையாது.  இதன் மூலம் ரமளானில் வம்புச் சண்டைக்கு வருவோரிடம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றோம்.
இதே போன்று ரமளானுக்குப் பிறகும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான் என்ற அடிப்படையில் ஒரு தரப்பாகிய நாம் இறங்கிப் போகின்ற போது அமைதி வாழ்கின்றது.  சுபிட்சம் ஏற்படுகின்றது.  இப்படி சுபிட்சமான பாடத்தை ரமளானுக்குப் பிறகும் அடுத்த ஆண்டு வரையில் அல்ல!  ஆயுள் வரை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
"சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர் களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 657
என்ற இந்த ஹதீஸ் அதிகாலை மற்றும் இஷா தொழுகைகளில் அலட்சியம் காட்டுவது நய வஞ்சகர்களின் அடையாளம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் ஒரு நல்ல முஸ்லிம் இவ்விரு தொழுகைகளில் அலட்சியம் காட்டுவது கிடையாது.
அதிலும் குறிப்பாக மழை மற்றும் பனி போன்ற கடுமையான குளிர் காலங்களில் காலையில் எழுவதற்கும், குளிர்ந்த தண்ணீரில் கை, கால் அலம்புவதற்கும், கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கும் சிரமமாக இருந்தாலும் அவற்றை எல்லாம் எதிர் கொண்டு, உண்மையான, நல்ல முஸ்லிம்கள் இந்தத் தொழுகைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இப்படிப்பட்ட கனமான தொழுகையான சுப்ஹு தொழுகை, நம்மிடம் நிழலிட்டுக் கொண்டிருந்த ரமளான் மாதத்தில் அதிகமான மக்களைக் கவர்ந்து இழுத்தது. ஜும்ஆவை விட அதிகமான மக்களை ரமளானின் சுப்ஹு தொழுகை தன்னகத்தே கொண்டு வரலாறு படைத்தது.
இதற்கே இத்தனை கூட்டம் என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. இவ்வாறு எல்லா நேரத் தொழுகை களிலும் இரவுத் தொழுகைகளிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.
இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் இறையில்லங்களில் எப்படி நிறைந்து வழிந்தனர்? இது உண்மையில் திருக்குர்ஆனின் ஈர்ப்பு சக்தி தான். அப்பப்பா? பள்ளிகளில் தான் எத்தனை புதுமுகங்கள்! புதுப் பொழிவுகள்! ஊருக்குள் இருப்பவர்கள், ஊருக்கு அப்பால் இருப்பவர்கள் என அத்தனை பேரையும் பள்ளிக்குள் பார்க்க முடிந்தது.
இந்தத் திருக்குர்ஆன் மக்களை தொழுகையின் பால் இழுத்துக் கொண்டு வந்தது போலவே தர்மங்களின் பக்கமும் இழுத்துக் கொண்டு வந்தது.
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே மிகப் பெரும் கொடை வள்ளலாய் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6
இந்த ஹதீஸில் கூறப்படுவது போன்றே இஸ்லாமிய மக்களும் ரமளானில் ஆகி விடுகின்றனர். அள்ளி அள்ளி வழங்குகின்றனர். அல்லாஹ்வின் அருளை அள்ளிப் பெற்று விடுகின்றனர். இஸ்லாமிய மக்களை இப்படி ஒரு தர்ம சிந்தனையின் பக்கம் கொண்டு வந்தது எது? இந்தக் குர்ஆன் தானே!
உலகத்தில் வேதங்கள் என்று சொல்லப்படுபவை எத்தனையோ உள்ளன. அவையெல்லாம் மக்களை விட்டு விலகி விட்டன. மக்களும் அவற்றை விட்டு விலகி விட்டனர். ஆனால் உண்மை வேதமான இந்தக் குர்ஆன் மட்டும் மக்களை விட்டுப் பிரியவில்லை. மக்களும் இந்த வேதத்துடன் தொடர்பிலிருக்கிறார்கள். அதற்குத் திருக்குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதம் சிறந்த எடுத்துக்காட்டு.
உண்மையில் இவ்வேதம் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் இருதயத்தைப் போன்று செயல் படுகின்றது. உடலில் ஓடுகின்ற மொத்த இரத்தத்தையும் தனக்குள் இழுத்து, சுத்தம் செய்து அனுப்பும் இருதயத்தைப் போன்று, திருக்குர்ஆன் உலக முஸ்லிம்களை ரமளானில் தன் பக்கம் இழுத்து, சுத்தப்படுத்தி அனுப்பி விடுகின்றது.
"ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக் கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சல் கண்டு விடுகின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 6011
இந்த ஹதீஸில் வருவது போன்று இஸ்லாமிய சமுதாயம் என்பது ஓர் உடலைப் போன்றது. அதன் இருதயமாக திருக்குர்ஆன் விளங்குகின்றது. இந்த இருதயம் ஆண்டுக்கொரு முறை அழைத்து துப்புரவுப்படுத்தி அனுப்புகின்றது.
அது தன்னிடம் வருகின்ற மக்களிடம் ஒரு செய்தியையும் சொல்லி அனுப்புகின்றது.
"ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான் கள் விலங்கிடப்படுகின்றார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1899
"உனக்கு அல்லாஹ் சுவனத்தைத் திறந்து வைத்து, நரகத்தை மூடி வைத்திருக்கின்றான்; ஷைத்தான்களை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளான்; சமுதாயத்தின் ஓர் உறுப்பாகிய நீ ஷைத்தான்களுக்குக் கட்டுப்பட்டு நரகத்திற்குச் செல்லாமல் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு சுவனத்திற்குள் வந்து விடு! சமுதாயத்தின் ஓர் அங்கமாகிய நீ திருந்துவதன் மூலம் இந்தச் சமுதாயம் சீர் பெற்று, உனது உலக வாழ்க்கையும், மறுமை வாழ்க்கையும் சீராகி விடுகின்றது! நான் இறங்கிய ரமளான் மாதத்தில் எந்த அல்லாஹ்வைப் பயந்து நீ வாழ்ந்தாயோ அதே அல்லாஹ்வை என்றென்றும் பயந்து வாழ்! இதுவே நான் இறங்கிய ரமளான் மாதம் விடும் செய்தியாகும்'' என்று சிம்பாலிக்காக, மானசீகமாக நமக்குக் கூறி நிற்கின்றது.
"ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957
இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும். இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும்.
பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்ற பழைய முகங்கள்! பள்ளியுடன் தொடர்பில்லாத புதிய முகங்கள்! அத்தனை பேர்களையும் இந்த ரமளான், பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது.
அராஜக ஷைத்தானின் ஆதிக்கம் ஒரு கட்டுக்குள் வருவதால் தானே கட்டுக்கு அடங்காத கூட்டம் பள்ளிகளில் கூடி களை கட்டுகின்றது; பள்ளி நிரம்பி வழிகின்றது. இந்த மிகப் பெரிய மாற்றத்தை ரமளான் மக்களிடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.
விபத்தில் கை, கால்கள் ஒடிந்து முடங்கிப் போனவர்களுக்கு அறுவை சிகிச்சை அளித்து, உலோகத் தகடுகள் பொருத்தி, அவர்கள் நடப்பதற்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுப்பார்கள். அந்தப் பயிற்சியில் பழைய நடையைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.
அது போன்று தான், பாவம் என்ற விபத்தில் மாட்டி, படுக்கையில் கிடந்த நம்மை, இந்த ரமளான் மாதம் சரி செய்து நடக்க விட்டிருக்கின்றது. நாம் அப்படியே நம்முடைய நடையைப் பெற்றுக் கொண்டு தொடர வேண்டும். புனித மிக்க இந்த ரமளான் மாதம் நமது உடலில் புது ரத்தத்தைப் பாய்ச்சி உள்ளது.
செல்போன்கள் இயங்குவதற்காக அதிலுள்ள பேட்டரிகளுக்கு மின்சாரத்தை சார்ஜ் செய்கிறோம். அது போன்று நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தை சார்ஜ் செய்யும் கருவியாக இந்த ரமளான் அமைந்துள்ளது.
அதிகாலை ஸஹர் நேரத்தில் நம்மை எழச் செய்தது.
அந்த நேரத்தில் இரவுத் தொழுகைகளைத் தொழ வைத்தது.
ஐந்து நேரங்களிலும் தனியாக அல்ல! ஜமாஅத்துடன் தொழ வைத்தது.
அதிகமதிகம் தான, தர்மங்களை அள்ளி வழங்க வைத்தது.
அன்றாடம் குர்ஆனுடன் தொடர்பை அதிகப்படுத்தியது.
பொய், புறம், சினிமா, சீரியல் என அனைத்துத் தீமைகளை விட்டும் அப்புறப்படுத்தியது.
வாய் கொப்பளிப்பதற்காக உள்ளே சென்ற சுத்தமான சுவையான தண்ணீர், தொண்டைக் குழிக்குள் விழுவதற்கு எத்தனை மைல் தூரம்? ஒரு மயிரிழை தூரம் தான். இருப்பினும் அந்தத் தண்ணீர் உள்ளே செல்லவில்லை. ஏன்?
அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம். இந்த அச்சத்தை ரமளான் நம்மிடம் பதித்தது; புதுப்பித்தது.
அனுமதிக்கப்பட்ட நமது மனைவியர் பகல் வேளைகளில் அருகில் இருந்தும், அடையாமல் தடுத்தது எது? அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம் தான்.
எங்கோ இருந்த நம்மை இந்த ரமளான் அல்லாஹ்வின் பக்கம் மிக அருகில் கொண்டு வந்து விட்டுள்ளது.
இறையச்சம் என்ற மின்னூட்டத்தை நம்முடைய உள்ளத்தில் ஏற்றியுள்ளது.
புனித ரமளான் ஏற்றிய இந்த மின்னூட்டம் இறங்கி விடாமல், இறைவன் அருகில் இருக்கிறான் என்ற உணர்வுடன் அவன் அருகிலேயே நாம் இருக்க வேண்டும்.
அதற்கு ஒரே வழி, ரமளானில் செய்த அந்த வணக்கங்களை அப்படியே விடாது தொடர்வதாகும்.
இந்த உறுதிப்பாட்டுடன் ரமளானுக்குப் பிறகுள்ள நம்முடைய வாழ்வைத் தொடர்வோமாக!
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment