பஷீர் அஹ்மத் உமரி, பேராசிரியர், ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரி,கடையநல்லூர்
குர்பானி கொடுப்பதன் தத்துவம்:
இறைவனின் கட்டளைக்குப் பணிந்து இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார்கள். ஆயினும் தியாகத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மகனுக்குப் பதிலாக ஒரு பலிப்பிராணியை அல்லாஹ் அறுக்கச் சொன்னான். மட்டுமல்ல வாய்மைக்கும் தியாகத் துக்கும் இச்சம்பவம் காலா காலத்திற்குப் பாடமாய்- பசுமையான நினைவாய் அமைய வேண்டும் என்பதற்காக உலக முஸ்லிம்களிடையே இந்த நடைமுறையை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான்.
'...நிச்சயமாக இது மகத்தான சோதனையாகும். அவருக்குப் பகரமாக பெரிய பலிப் பிராணியைக் கொடுத்தோம். பின்வரும் மக்களிடையே இந்நடைமுறையை நாம் விட்டு வைத்தோம்.
(37:106-108)
இதனால்தான் ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் பிராணிகளை அறுத்துப் பலியிடுகிறோம்.
குர்பானி கொடுக்கும் நேரம்:
பெருநாள் தொழுகைக்குப் பிறகு. பெருநாள் தொழுகைக்கு முன் அறுத்தால் அது செல்லாது.
'நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'இன்றைய தினம் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுத லாகும். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையில் நடந்தவராவார். யார் தொழுவதற்கு முன் அறுத்துவிட்டாரோ அவர் அறுத்தது இறைச்சிக்காகவாகும். தமது குடும்பத்திற்காக அவர் அவசரப் பட்டுவிட்டார். அது குர்பானியாக ஆகாது' என்று குறிப்பிட்டார்கள்.
(புகாரி 968)
அறுக்கும் முறை:
கத்தியை நன்றாகத் தீட்டி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுக்க வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆட்டைக் கொண்டுவரச் சொன்னார்கள். அது கொண்டு வரப்பட் டதும் 'ஆயிஷாவே! கத்தியைக் கொண்டுவா! அதைக் கல்லில் தீட்டு! என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவ்வாறு செய்தார்கள். பிறகு நபியவர்கள் கத்தியை வாங்கி ஆட்டைக் கிடத்தி அதனை அறுத் தார்கள்.
(முஸ்லிம் 1967, அபூதாவூத் 2792)
மற்றொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்| என்று கூறி அறுத்ததாக உள்ளது. (பார்க்க: புகாரி 5565, முஸ்லிம் 1966)
இங்கு நபியவர்கள் ஆட்டைக் குளிப்பாட்டவில்லை. பூச்சுற்றவில்லை பால் கொடுக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் உள்ள இதுபோன்ற நடைமுறைகள் பித்அத்தாகும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதும்
'நபி(ஸல்)அவர்கள் காலத்தில் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்' என அபூஅய்யூப்(ரலி) அவர்கள் கூறினார் கள். (திர்மிதி 1505, இப்னுமாஜா 3147)
கூட்டுக் குர்பானி
ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் நபி(ஸல்) அவர்கள் 7 பேர் சார்பாக ஒரு ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தார்கள். (முஸ்லிம் 1318) எனவே மாட்டையோ ஒட்டகத் தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் ஏழு பேர் பங்கு சேர்ந்து கூட்டுக் குர்பானி யாகக் கொடுக்கலாம்.
குர்பானிக்கு ஏற்ற பிராணிகள்:
ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றில் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை- சுமார் இரண்டு வயது பூர்த்தியானவையாக இருக்க வேண்டும். மேலும் குறைகள் உள்ள பிராணிகளைக் குர்பானி கொடுக்;கக் கூடாது. உதாரணமாக ஒரு கண் குருடானவை நோய் உள்ளவை நொண்டியானவை கொம்பு ஒடிந்தவை மெலிந்தவை போன்றவை. இவையாவும் குறைகள் என்று சொல்லும் அளவுக்கு வெளிப்படையான- பெரிய குறைகளாக இருக்க வேண்டும். அற்பமான குறைகள் மன்னிக்கப்படும். (பார்க்க: ஆபூதாவூத் 2802, நஸயீ 4295)
குர்பானி இறச்சியை விநியோகம் செய்யும் முறை:
குர்பானி இறச்சியை மூன்று பங்காகத்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. தம் குடும்பத்துக்கு நியாயமான அளவு எடுத்துக் கொண்டு மீதியை ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும். தோல்களையும் குர்பானி பிராணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கயிறு, ஒட்டகத்தின் மேல் சவாரிக்காகப் பயன்படுத்தப்பட்ட துணி, அம்பாரி போன்ற இதரப் பொருட்களையும் தர்மம் செய்திட வேண்டும். இவற்றில் எதையும் (இறைச்சி உட்பட) அறுத்தவ ருக்கும் உரித்தவருக்கும் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இவ்வாறு செய்திட நபியவர்கள் அலீ(ரலி)அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (பார்க்க: புகாரி 1717, முஸ்லிம் 1317)
'கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதை நீங்களும் கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்.' (அல்குர்ஆன்: 22:28)
குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
'யார் குர்பானி கொடுக்க நாடுகிறாரோ அவர் துல்ஹஜ் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டவோ முடிகளை நீக்கவோ கூடாது' என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 1977, நஸயீ 4285)
குர்பானியின் மூலம் நாம் பெற வேண்டிய பாடம்:
இறைவன் கட்டளையிட்டால் எந்த தியாகத்துக்கும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தயாரானதுபோல நாம் நம்முடைய மார்க்கத்துக்காக செல்வம் பதவி தொழில் சொந்தம் பந்தம் ஏன் நமது உயிரையும் தியாகம் செய்வ தற்குத் தயாராக வேண்டும். இத்தகைய உணர்வைப் பெறாமல் பிரணிகளை அறுப்பதால் எந்த நன்மையுமில்லை. அல்லாஹ் கூறுகிறான்: 'அவற்றின் மாமிசங்களோ அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.' (22:37)
0 comments:
Post a Comment