بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பராஅத்தும் பித்அத்தும்

                                                                                                                    பசீர் அகமத் உமரி


                பராஅத் இரவு! பெருவாரியான முஸ்லிம்களால் புனிதமிக்க இரவாகக் கொண்டாடப்படுகின்றது. 
                 ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு தொடங்கியதும் அல்லாஹ் முதல் வானத்திற்கு வந்து என்னிடம் பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? அவர்களது பாவங்களை மன்னிக்கிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு நான் ரிஸ்க் வழங்குகிறேன். நோய் நொடியால் வாடு வோர் உண்டா? அவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறேன்.... என்றெல்லாம் பஜர் வரை கூறிக் கொண்டே இருக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது.
                      இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூபக்கர் பின் அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அபீ ஸப்ரா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யுரைப்பவர் புனைந்து கூறுபவர் என்று ஹதீஸ்கலை வல்லுநர்களும், இமாம் அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்) அவர்களும், இவர் ஏற்கத் தக்கவர் அல்லர் என்று இமாம் நஸயீ அவர்களும். இவர் பலவீனமானவர் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். (பார்க்க: தக்ரீபுத் தஹ்தீப், மீஸானுல் இஃதிதா)
                     மேலும் நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு அன்று அடக்கத்தலத் திற்குச் சென்று பிரார்த்திதததாகவும், அல்லாஹ் இந்த இரவில் (முதல் வானத்திற்கு வந்து) தனது படைப்பினங்களை எட்டிப் பார்த்து அவர்களுக்கு மன்னிப்பை வழங்குகிறான் என்ற கருத் திலும் பல்வேறு நபிமொழிகள் வந்துள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையும் இட்டுக் கட்டப்பட்டவையுமாகும்.
                       இது போன்ற பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டுதான் ஷஅபான் பதினைந்தாம் இரவில் (பராஅத் இரவில்) பின்வரும் பித்அத்துகளைச் செய்கின்றனர்.
                   1. பள்ளிவாசல்களில் மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்குப் பிறகு மூன்று யாஸீன் ஓதுவது. முதல் யாஸீன் பாவமன்னிப்புக்காகவும், இரண்டாவது யாஸீன் ரிஸ்க் விஸ்தீரணத்திற்காகவும், மூன்றாவது யாஸீன் நிவாரணம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் ஓதுவது.
                  2. ஆபத்து ரொட்டி (?) எனும் பெயரில் ரொட்டி சுட்டு யாசிப்போருக்கு வழங்குவது.
                  3. தெருவில் யாசகம் கேட்டு வருகின்ற முஸாபிர்களுக்கு உணவளிப்பது.
                     4. இரவெல்லாம் கண் விழித்து 'ஸலாத்துர் ரகாயிப் மிஅத்துர் ரகாயிப'; என்ற பெயரிலும் 'ஸலாத்துல் அல்ஃபியா' என்ற பெயரிலும் சிறப்புத் தொழுகை (தனித் தனியாகத்) தொழுவது. அதாவது நூறு ரக்அத் தொழுவது. அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல் ஹுவல்லாஹு அஹத் ஒரு தடவை (அல்லது பத்து தடவை) ஓதுவது. இதில் பல வகைகள் உள்ளன.
                  5. பகலில் நோன்பு நோற்பது
                  6. பகலில் ரொட்டி சுட்டு ஃபாத்திஹா ஓதி விளம்புவது
                  இன்னும் இதுபோன்ற பித்துகளைச் செய்கின்றனர். இந்த பித்அத்துகள் ஊருக்கு ஊர், நாட்டுக் நாடு வித்தியாசப்படும்.
                      ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவின் சிறப்பு குறித்து அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் யாவும் பலவீனமாவையும் இட்டுக்கட்டப்பட்டவையுமாகும். இதன் சிறப்பு பற்றி அறிவிக்கப்படும் ஆதாரப் பூர்வமான எந்த நபிமொழியையும் நாம் பார்க்க முடிவதில்லை. மேலும் பராஅத் இரவு என்ற சொல்லும் நபிமொழிகளில் காணப்படவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்!
                   இந்த இரவைப் புனிதப்படுத்தியது யார்? அல்லாஹ்வா? அல்லாஹ்வுடைய தூதரா? ஒரு இரவைப் புனிதமானதாக் கருதி அதில் சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டுமானால் அல்லாஹ்வோ அவனது தூதரோ நமக்கு வழிகாட்டி இருக்க வேண்டும். அல்லாஹ்வோ அவனது தூதரோ வழிகாட்டாத எந்த ஒரு அமலும் அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.
                   நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: நமது உத்தரவில்லாத செயலை எவன் செய்கிறானோ அது நிராகரிக்கப்படும்.
                                        அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243
                  மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டவை அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்குக் கொண்டு செல்லும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697
                   நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவன் உருவாக்குகிறானோ அது நிராகரிக்கப்படும்.
                                                    அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸாயீ 1560
                   எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! குர்ஆன் ஹதீஸில் இல்லாத இதுபோன்ற காரியங்களைச் செய்வதை விட்டும் நாம் விலகிக் கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!


Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment