بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மீலாது விழா கொண்டாடலாமா?

முஹிப்புல்லாஹ் உமரீ
 
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா
முஸ்லிம்களுக்கு ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகின்றது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமைய வேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோம்.

மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி (ஸல்) அவர்களோ நாற்பெரும் கலீஃபாக்களோ மற்ற நபித்தோழர்களோ அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ அல்லது நபி (ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா எப்போது ஆரம்பமானது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஹிஜ்ரி 357 முதல் 567 வரை எகிப்தை ஆண்டு வந்த பாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று.
(நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நாம் அறியலாம்.
மீலாது விழாவும் கிறிஸ்துமஸ்ஸும்:
இயேசுவுக்கு (ஈஸா அலை) கிறிஸ்தவர்கள் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடு கிறார்கள். இது சரிதானா? என்றால் சரியில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:  பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த மதத்தைச் சார்ந்தவனே. (நூல்: அபூதாவூத்)
கிறிஸ்தவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போன்று நாமும் கொண்டாடினால் நாம் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாக ஆகிவிடுவோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் இந்த எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இது போன்ற பிற மதக் கலாச்சா ரங்களைப் பின்பற்றுவதை விட்டும் முற்றிலும் விலகி தூய இஸ்லாத்தை பின்பற்றும் முழுமையான இஸ்லாமியர்களாக வாழ முயற்சிக்க வேண்டும்
அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விஷேச வழிபாடுகள் நம் சமுதா யத்தில் அரங்கேற்றப்படுகின்றன. அதில் முக்கியமானது மவ்லிதாகும். இதனை முஸ்லிம்கள் புனித வழிபாடாகக் கருதி தங்கள் வீடுகளில் ஓதிவிருகின்றனர். மவ்லித் என்பது அரபியில் எழுதப்பட்ட கவிதைகள் ஆகும். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. அவற்றைப் பள்ளிவாசல்களிலும் பாடிவருகின்றார்கள். நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களில் பல வரிகள் நபியைப் புகழ்வதில் வரம்பு மீறியிருக்கின்றன. நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடிமை என்ற நிலையிலிருந்து உயர்த்தி கடவுள் நிலைக்கு கொண்டு செல்கின்றன. நபி (ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான இறைவனுக்கு இணைவைக்கும் கருத்துக்கள் இப்பாடல்களில் உள்ளன. எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களைப் புகழ்வதற்கே பாடப்படுகிறது! இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்பட வேண்டிய பள்ளிவாசல்களிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்துடன் பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பா செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.
பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் எந்த நாளில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில் தான் நபி (ஸல்) அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா? நபி (ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் 12 ல் தான் பிறந்தார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான சான்று எதுவுமில்லை என்பது தனிவிஷயம்.
இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர். வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை. மறைத்துவிட்டடார்கள் என்று கூற வேண்டிவரும். நவூதுபில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்தவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான் (ஹதீஸின் சுருக்கம் முஸ்லிம்)
நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் நபிமார்களில் சிறந்தவரும் இறுதி நபியுமாவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச்ச ட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள் செய்து வழிகாட்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் அவர்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
என் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் சொர்க்கம் செல்வார்கள். (அதை) நிராகரிப்பவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! (அதை) யார் நிரகரிப்பார்? என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கம் செல்வார். எனக்கு மாறு செய்ப வரே நிராகரிப்பவர் என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நபி (ஸல்) அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது
        அல்லாஹ் நபி (ஸல்) அவர்களோடு இம்மார்க்கத்தை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்து விட்டான்: இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
இந்த வசனம் நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும் போது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது.
இதனடிப்படையில் மீலாது விழா நபி (ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும் போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும். இது போன்று மார்க்க விசயத்தில் விளையாடிய யூத கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இது போன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உருவாக்கு வதை விட்டும் முற்றிலும் தூரமாகி விட வேண்டும்.
மார்க்கத்தில் நூதனச் செயல்
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத்- மார்க்கத்தின் நூதனச் செயலாகும். அல்லாஹவும் அவனது தூதர் முகம்மது (ஸல்) அவர்களும் கற்றுத்தராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தினால் நிச்சயமாக அது வழிகே டாகும் அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும் அதற்குரிய தண்டனையும் கிடைக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக எவன் உருவாக்குகிறானோ அது நிராகரிக்கப்படும். நபிமொழி (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவன் செய்கிறானோ அது நிராகரிக்கப்படும். நபிமொழி  (நூல்: முஸ்லிம்)
மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை நீர் அருந்த விடாமல் மலக்குமார்கள் இழுத்துச் சென்று விடுவார்கள். சுருக்கம். (நூல்: புகாரி)
எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி (ஸல்) அவர்கள் புகட்டும் நீரை அருந்தும் பாக்கியத்தை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.
        எனவே அன்பிற்கினிய சகோதர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்திற்கு முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ உழைப்பாலோ ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலம் உதவ வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment