முஹிப்புல்லாஹ் உமரி
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷூரா நாள் என்றழைக்கப்படும்.
ஆஷூரா நோன்பு ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு கடமையாக இருந்தது
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ''யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592
மற்றொரு அறிவிப்பில்
குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ''(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 1893
ஆஷூரா நோன்பின் சிறப்பு
ரமலான் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
ஆஷூரா நாளில் நோன்பு வைப்பதின் சிறப்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு ஆஷூரா நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன்னுள்ள ஓராண்டுப் பாவங்களை அழிக்கிறது என கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரலி) நூல்: முஸ்லிம்
ஆஷூரா நோன்பின் பின்னணி
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ''இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். ''இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடல்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ''நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர) நூல்: புகாரி 3397
மேற்கூறிய நோக்கத்திற்காகத்தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது என்பது விளங்குகிறது எனவே மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டதற்காக அவர்கள் நோன்பு நோற்றதைப் போன்று நாமும் ஆஷூரா நோன்பு நோற்கிறோம் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆஷூரா நாள் குறித்த தவறான நம்பிக்கைகள்
முஸ்லிம்களில் சிலர் கர்பலா எனுமிடத்தில் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டது இந்நாளில் தான். அதற்காகத்தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அசனார், ஹுஸைனார் நோன்பு என்றும் கூறுவர். ஆனால் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்கும் ஆஷூரா நோன்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
மேலும் சிலர் ஷியாக்களைப் போன்று நெஞ்சில் அடித்துக் கொள்வதும், கன்னங்களில் அடித்துக் கொள்வதும், சட்டையை கிழித்துக் கொள்வதும், வருடாவருடம் துக்கம் அனுஷ்டிப்பதும் இது போன்ற காரியங்களைச் செய்கின்றனர். இன்னும் சிலர் ஆஷூரா நாளன்று கொள்ளுக்கட்டையை தயார் செய்து ஹஸனார், ஹுஸைனார் பெயரில் பாத்திஹா ஓதி விளம்புவார்கள். இவைகள் யாவும் இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
(மரண செய்தி மற்றும் துக்கமான விசயங்களுக்காக) யார் கன்னங்களில் (முகங்களில்) அடித்துக் கொள்கிறார்களோ, சட்டைகளை கிழித்துக் கொள்கிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரி
இறுதியாக இஸ்லாத்தில் ஒரு செயல் கடமையாகவோ, சுன்னத்தாகவோ இருக்க வேண்டுமானால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் தான் ஆக முடியுமே தவிர நபியவர்களுக்குப் பிறகு உலகில் என்ன நடந்தாலும் அதற்காக எந்தவொரு வணக்கமும் இஸ்லாத்தில் நுழைய முடியாது.
நோன்பு வைக்க வேண்டிய நாட்கள்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறிஸ்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அடுத்தவருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 1916
நபி (ஸல்) அவர்கள் தமது கடைசி வருட காலத்திலும் ஆஷூரா நோன்பை தானும் வைத்து மற்றவர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இந்நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் முஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரு நாட்கள் நோன்பு வைக்க விருப்பப்பட்டுள்ளதாலும் அவ்விரு நாட்களும் நோன்பு வைப்போமாக!
குறிப்பு: இந்த வருடம் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை நவம்பர் மாதம் 26ம் தேதி மக்ரிபிற்குப் பிறகு பார்க்கப்பட்டது. அதனடிப்படையில் முஹர்ரம் பிறை 9, 10 ஆகிய இரு நாட்கள் டிசம்பர் 5,6 ஆகிய இரு நாட்களில் வருகின்றது எனவே அந்நாட்களில் நோன்பு வைத்து அதற்குரிய மறுமை பேற்றை அடைய முயல்வோமாக!
0 comments:
Post a Comment