மணிக் கணக்கில் பேசும் பேச்சுக்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதாரமற்ற பேச்சுக்களாகவே இருக்கின்றன. சம்பவத்தை நேரடியாகக் கண்டிருக்க மாட்டார். ஆனால் கண்ணால் கண்டதைப் போல் மற்றவரிடம் விவரித்துக் கொண்டிருப்பார்.
'நீ கண்ணால் பார்த்தாயா?' என்று கேட்கும் போது சற்றுத் தடுமாறி, 'இல்லை! இன்னார் தான் இப்படிச் சொன்னார்' என்று கூறுகிறார்.
சொல்லப்பட்ட செய்தி சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல், தனக்கு நெருடலை ஏற்படுத்தாமல் இருந்தால் உடனே அதை பரப்பி விடுகிறார். இதைக் கேட்பவர்களும் இதுபோன்றே நடந்து கொள்கிறார்கள்.
இதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் தீர விசாரிக்காமல் கேட்டவுடன் நம்பி விடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் நரகப் படுகுழியே பரிசாகக் கிடைக்கும்.
உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.
அல்குர்ஆன் (24:15)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். 'இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்' (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)யின் எழுத்தாளர்
நூல்: புகாரி (1477)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்.
அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி)
நூல்: முஸ்லிம் (6)
பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.
'இருக்கும் இருக்கும்' என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?
செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் இஸ்லாம் மட்டும் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. ஒரு பெண் மீது அவதூறு சுமத்துவது என்றால் குறைந்த பட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வரிலியுறுத்துகிறது.
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.
(அல் குர்ஆன் 24 :4)
நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
அவதூறு கூடாது
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
(அல் குர்ஆன் 33 : 58)
தான் செய்த பாவமான காரியங்களை அடுத்தவர் மீது சுமத்துதல் மிகப் பெரும் பாவமாகும். இதனை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான்.
தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.
(அல் குர்ஆன் 4:112)
சம்பந்தமில்லாமல் ஒருவர் மற்றொருவர் மீது அவதூறு சொல்வதைக் கேட்டால் அவர்களை நாம் கண்டிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இதைக் கேள்விப்பட்ட போது '' இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு'' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?
(அல் குர்ஆன் 24:16)
யூகங்களைப் பின்பற்றாதீர்கள்
அவதூறு மட்டுமில்லாமல் வெறும் யூகங்களின் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சாட்டுதல் மிகப் பெரும் தவறாகும். இதையே அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகிறான்.
அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்று வதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.
(அல் குர்ஆன் 53 : 28)
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல் குர்ஆன் 49 : 12)
கோள் மூட்டுவது கூடாது
இரண்டு கூட்டங்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவர் மற்றவர் மீது தவறான விஷயங்களைப் பரப்புவது;ம் ஒருவருக்கொருவர் கோள் மூட்டுவதும் கூடாது என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்
அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தால் சீரழிவைத் தவிர (எதையும்) உங்களுக்கு அதிகமாக்கியிருக்க மாட்டார்கள். குழப்பம் விளைவிக்க எண்ணி, உங்களிடையே கோள் மூட்டியிருப்பார்கள். உங்களில் அவர்களின் ஒற்றர்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.
(அல் குர்ஆன் 9:47)
வாயினால் ஏற்படும் இத்தகைய பாவங்களிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து அருள் புரிவானாக..
0 comments:
Post a Comment