முஹிப்புல்லாஹ் உமரீ
பெருநாள் தொழுகையின் நேரம்
சுப்ஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும்,அஸருக்குப் பின் சூரியன் மறைகின்றவரை தொழுவதையும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 581
ஆக சூரியன் முழுமையாக வெளிப்பட்டவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கிவிடுகின்றது.ஆனால் அனேக இடங்களில் காலை 11 மணி வரை தாமதப்படுத்திப் பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள் இது தவறாகும்.
பெருநாள் தொழுகைகளை திடலில் தான் தொழவேண்டும்
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளிலும்,ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்)முஸல்லா எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புகாரி 956
பெருநாள் தொழுகையில் பெண்கள்
நபி(ஸல்)அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் உள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும்.அன்றைய நாளின் பரக்கத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும்.அவர்களோடு இவர்களும் துஆச் செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 971
தொழுகையும்,குத்பாவும்
நபி(ஸல்)அவர்கள்,அபூபக்ர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி) ஆகியோர்களுடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 962
பாங்கு,இகாமத் இல்லை
நோன்புப் பெருநாளிலும்,ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கும்,இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),ஜாபிர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம்
பெருநாள் தொழுகைக்கு முன்,பின் சுன்னத்துக்கள் கிடையாது
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்.அதற்கு முன்பும்,பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 964
குறிப்பு: சில இடங்களில் பெருநாள் தொழுகைக்கு முன்,பின் சுன்னத் தொழுகிறார்கள். இது நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.
தொழுகை முறை
நபி(ஸல்)அவர்கள் முதல் ரக்அத்தில்(தக்பீர் தஹ்ரீமாவிற்குப் பிறகு வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதி அல்லது அல்லாஹும்ம பாயித் பைனீ எனத் தொடங்கும் துஆக்களில் ஏதேனும்; ஒன்றை ஓதிக் கொள்வார்கள் அதன்பின்பு அதிகப்படியாக)7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில்(அதிகப்படியாக)5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் பின் அல் ஆஸ்(ரலி) நூல்: திர்மிதி 492
குறிப்பு: 7 5 12 தடவை அல்லாஹுஅக்பர் கூற வேண்டும். அவற்றுக்கிடையே எந்தவொரு துஆ,திக்ரும் ஓத வேண்டியதில்லை.
ஒவ்வொரு தக்பீரின் போது கைகளை அவிழ்த்து உயர்த்தி மீண்டும் (நெஞ்சில்)கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.
ஓரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்
பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் (போவதற்கும்,வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். நூல்: புகாரி 986
சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?
நோன்புப் பெருநாள் தினத்தில் நபி(ஸல்)அவர்கள் உண்ணாமல் புறப்படமாட்டார்கள்.ஹஜ்ஜுப் பெருநாளில் தொழுது விட்டு தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதலில் சாப்பிடுவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: தாரகுத்னீ
இறுதியாக அல்லாஹ்வும்,அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுதளை அமைத்துக் கொள்ள வல்ல இறைவன் அருள்புரிவானாக!
0 comments:
Post a Comment