بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அல்குர்ஆனின் சிறப்புகள்

                                                       முஹிப்புல்லாஹ் உமரி
காலமாற்றங்கள் அல்குர்ஆனை காணடிக்க முடியவில்லை. எல்லாக் காலங்களையும் வென்றதாக எக்காலத்துக்கும் உகந்ததாக அல்குர்ஆன் ஜீவனோடு பிரகாசிக்கின்றது. விஞ்ஞானயுகம் கம்ப்யூட்டர்யுகம் என்றெல்லாம் ஏதேதோ யுகங்கள் மாறிமாறி வந்தாலும் அந்த யுகங்களால் அல்குர்ஆனை பொய்ப்பிக்க முடிவதில்லை. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கியருளப்பட்ட மகத்தான நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்வின் வாக்காகிய இந்தக் குர்ஆனை மெய்ப்படுத்தும் சேவையைத்தான் செய்து வருகின்றன.
உலகில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ஆட்சிமாற்றங்களும் திருமறைக் குர்ஆனுக்கு எந்த பாதிப்பையும் இது நாள்வரை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு கொள்கையைக் கொண்டவர் அரசுக்கட்டிலில் ஏறினால் தனக்கு வேண்டாத எதிரான கொள்கைகளையும் அது சம்பந்தமானவைகளையும் அழித்து விடுவதோடு அவற்றை பின்பற்றும் மக்களையும் கேவலப்படுத்தி விடுவர். ஆனால் அப்படிப்பட்ட அவர்களால் அல்குர்ஆனை ஒன்றும் செய்யமுடியவில்லை.

இன்றைக்கு உலகிலிருக்கும் வல்லரசுகள் இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் மக்களையும் தீவிரவாதிகளாக தீண்டத்தகாதவர்களாக சித்தரித்த போதும் இறைமறைக் குர்ஆனை அவர்களால் காயப்படுத்த முடியவில்லை. மாறாக கலங்கியிருக்கும் தன் சமுதாய மக்களை இன்றும் அது காத்து நிற்கும் அரணாக இருப்பதுடன் களங்கம் சுமத்தும் வல்லரசுகளுக்கு கண்ணியமிக்க பதிலடி கொடுத்து கதிகலங்கச் செய்கிறது. தானும் தன்னை உண்மையாகப் பின்பற்றும் மக்களும் அறவழியில் நிலைத்திருப்பவர்கள் என்று உலக அரசாங்கங்களுக்கு ஓங்கி உரத்துச் சொல்கிறது இந்த திருமறைக்குர்ஆன். இதற்காக அதற்கு எந்தவொரு அரசாங்கத்தின் துணையோ, படைபலமோ ஆதரவாக இல்லை. இதிலிருந்தே குர்ஆன் வல்லமையும், புகழுக்குரிய அல்லாஹ்வின் வாக்கு என்பதற்கு வலுவான அத்தாட்சியல்லவா?!
வல்ல நாயன் அல்லாஹ் இறக்கியருளிய அல்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். போலியான் மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன்படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ வெறும் பெயர் தாங்கிகளாகவே இருந்து வருகின்றார்கள். அப்படி இருப்பவர்கள் அந்தத் தன்மையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் இன்ஷாஅல்லாஹ்!
அல்குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப்பட்ட வேதமாகும். இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறியுள்ளான்.
இந்தக்குர்ஆன் ரமலான் மாதத்தில்தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும. நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (அல்குர்ஆன் 2:185)
மற்றொரு இடத்தில் கூறியுள்ளான்.
இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது (அல்குர்ஆன் 17:9)
மனிதர்களில் சிறந்தவர்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) நூல்: புகாரி 5028
இவ்வுலகில் நமக்குப் பிடித்தவர்கள் நம்மைப் பாராட்டினால் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் நம் அனைவருக்கும் உயிரை விடவும் மேலான நபியவர்களின் வாயால் சிறந்தவர் என்கிற பாராட்டைப் பெற வேண்டுமெனில் அது அல்குர்ஆன் மூலமே கிடைக்கின்றது என்பதை மேற்கூறப்பட்டுள்ள நபிமொழி மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
குர்ஆனை ஒதுபவர் அழகிய உதாரணத்திற்குரியவர்!: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று வாசனையும் நன்று. மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்துகொண்டு, குர்ஆனையும் ஓதிவருகிறவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று சுவையோ கசப்பு. தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு அதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 5020
இவ்வுலகில் வாழும் அனைவரும் ஒரு நல்ல உதாரணமாக இருப்பதற்குத்தான் விரும்புவார்கள். கெட்டவனாக இருந்தாலும் கெட்ட உதாரணமாக இருப்பதற்கு விரும்ப மாட்டான். இப்படி எல்லோருமே விரும்பக்கூடிய ஒரு நல்ல உதாரணத்தைப் பெற வேண்டுமெனில் இந்தக் குர்ஆனை ஓதுவதன் மூலமே இச்சிறப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது விளங்குகிறது.
குர்ஆன் ஓதுவதின் நன்மைகள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன் என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: திர்மிதி 2910
இவ்வுலகில் எந்தவொரு நன்மையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் அதற்காக சில கஷ்டங்களை அனுபவித்த பிறகே அதன் பலனை அனுபவிக்க முடிகின்றது. ஆனால் அவை எல்லாமே இந்த உலகத்துடன் அழிந்து போய் விடுகின்றன. எந்த அளவிற்கு என்றால் ஒரு சில காரியங்களை நாம் மிகவும் சிரமப்பட்டுச் செய்கின்றோம். ஆனால் அதன் பலன் ஒரு மணி நேரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ முடிந்து விடுகின்றது. அந்த அளவிற்குத் தான் அதன் பலன்கள் நிலையற்றவையாக உள்ளன.
ஆனால் நிலையானதும், மிpகவும் எளிதாக நன்மையைப் பெற்றுத் தருவதுமான செயல் ஒன்று இருக்குமெனில் அது வல்ல ரஹ்மானின் திருமறைக் குர்ஆனை ஓதுவதில் தான் இருக்கும். வேறு எந்தவொரு புத்தகத்தின் எந்தவொரு எழுத்தினை படிப்பதாலோ ஏன் அரபி எழுத்துக்கள் கொண்ட எந்தவொரு ஏட்டை படித்தாலும் கிடைக்காது. மேலும் குர்ஆனை ஓதுவதற்காக நாம் எந்தவொரு சிரமத்தையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதாவது தொழுகை என்ற வணக்கத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் தொழவேண்டும். உளூச் செய்ய வேண்டும். ஆண்களாயிருந்தால் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கின்றன. அதனடிப்படையில் செய்தால்தான் தொழுகையின் முழுமையான நன்மைகளை அடைய முடியும்
குர்ஆன் ஓதுவதைப் பொறுத்த வரையில் இது போன்ற எந்தவொரு நிபந்தனையும் இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அதிகமான நன்மைகளை அள்ளி விடலாம் என்பதை மேற்கூறிய நபிமொழி மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்ள சிரமம் மேற்கொள்பவர்களுக்கான கூலி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம் 798
குர்ஆனை ஓதத் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கும் மார்க்கம் ஒரு நற்செய்தி கூறுகின்றது. அதாவது முயற்சி திருவினையாக்கும் என்பது போன்று ஒரு மனிதன் குர்ஆனை ஓதுவதற்கு முயற்சி செய்கின்றான். அதன் மூலம் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. அதையும் பொருட்படுத்தால் அவன் திக்கித் திணறி ஓதுகின்றான் என்றால் அதற்காக அவனுக்கு இரு மடங்கு கூலி கிடைக்கின்றது என்பதைப் புரியலாம்.
குர்ஆன் ஓதுவதின் இம்மைப் பலன்: நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ் இந்தக் குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தார்களின் மதிப்புகளை உயர்த்துகிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதை உதாசீதனப்படுத்திய) எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்;த்துகிறான். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: முஸ்லிம் 1353
இன்று நம் சமுதாய மக்களின் மிக இழிவான நிலைக்கு காரணம் மக்கள் இந்நபிமொழியை கவனிக்கத் தவறிவிட்டனர் என்பதே பொருளாகும்.
குர்ஆன் ஓதுவதின் மறுமைப்பலன்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்தவருக்கு பரிந்துரையாக வரும். அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: முஸ்லிம் 1337
இன்றைய முஸ்லிம்களைப் பொறுத்த வரை உண்மைச் சான்றுகளால்; நிறைந்து விளங்கும் இறைவேதமாம் அல்குர்ஆனுடைய அருமை, பெருமை தெரியாமல் இருக்கின்றார்கள். தங்களுடைய வாழ்க்கையின் ஆதாரச் சுருதியாய் இருக்கும் இறைவேதத்தை அணுகுவதிலும் ஆய்வுச் செய்வதிலும் தங்களுடைய பொன்னான நேரங்களை பயன்படுத்தாமல் பயனற்ற காரியங்களில் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இந்த உலக வாழ்க்கைக்காக என்னவென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சிரமம் பார்க்காமல் செய்கின்றார்கள் உதாரணமாக ஒரு வேலை வேண்டும் என்றால் அதற்காகப் பல மனிதர்களை சிபாரிசுக்காகத் தேடி அலைகின்றார்;கள். நிலையற்ற உலகிற்கு இப்படி முயற்சி செய்கின்றார்கள் ஆனால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு சிபாரிசாக வரக்கூடிய அல்குர்ஆனை மறந்து விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் அருள்: குர்ஆனை ஓதும் போது நன்மைகள் கிடைப்பது போன்று பிறர் ஓதுவதை; கேட்கும் போதும் நன்மை கிடைக்கும். அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் ஓதப்படும் போது அதை செவிமடுங்கள். வாய் மூடுங்கள். நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் (அல்குர்ஆன் 7:204)
ஷைத்தானை விரட்டும் மருந்து!: நமக்கெல்லாம் ஜென்ம விரோதியாக இருக்கின்ற ஆணவம் கொண்ட ஷைத்தானை விரட்டும் ஒரு மருந்தாக இந்தக் குர்ஆன் இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 780
பாதுகாப்பு கிடைக்கும்: மனிதனாக பிறந்த அனைவருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஷைத்தானை விட்டு பாதுகாப்புப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவன் எல்லா நேர்த்திலும் மனிதனை ஆட்டிப் படைப்பதில் குறிக்கோளாய் இருப்பான்.
உதாரணமாகச் சொல்வதென்றால் ஒரு மனிதனுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரக்கூடிய தூக்கத்திலும் கெட்ட கனவை ஏற்படுத்தி அதன் மூலம் நம்முடைய நிம்மதியைக் கெடுப்பான் . இது போன்ற ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் பாதுகாக்கக் கூடியதாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 3275
குர்ஆன் ஒதும் போது மனஅமைதியும் வானவர்களும் சூழ்ந்து கொள்வர்: நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.
காலை நேரமானது போது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)'' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கிய போது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)த போது அதைக் காணவில்லை'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களை விட்டும் அது மறைந்திருக்காது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உசைத் இப்னு ஹுளைர் (ரலி) நூல்: புகாரி 5018
பாழடைந்த வீடு: நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள் குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவராவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதி 2837
நபிகளாரின் எச்சரிக்கை: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்துவிட்டுவிட்டாலோ அது ஓடிப்போய்விடும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 5031
 ஆகவே குர்ஆனை நினைவுப்படுத்திக் கொள்வதும் அதனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வதும் மிக அவசியமாகும் ஏனெனில் குர்ஆன் முஸ்லிம்களுக்கு அருட்கொடையாகவும், நோய் நிவாரணியாகவும், பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் உள்ளது என அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான். நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.(அல்குர்ஆன் 17:82)

இன்னும் இது போன்று ஏராளமான சிறப்புகள் அல்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் அனைவரும்  அல்குர்ஆனுக்கு இருக்கின்ற சிறப்புகள் யாவற்றையும் உணர்ந்து செயல்பட முனைவோமாக! வல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக!
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment