بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

வரதட்சணை ஓர் சமுதாய சீரழிவு

 முஹிப்புல்லாஹ் உமரி

அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள்.             
(அல்குர்ஆன் 4:4)
நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு செல்வக் குவியலையே (மஹராகக்) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து எதனையும் நீங்கள் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.                                                   
(திருக்குர்ஆன் 04:20)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹர் (விவாகக் கொடை)தான்.                                            
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5151
தமிழகத்தில் பெரும் ஆலமரம் போன்று காட்சியளித்த இறைவனுக்கு இணை வைக்கும் செயல்களும் மற்றும் இந்த மரத்தின் கிளைகளாகவும் இலைகளாகவும் இருந்த மார்க்கத்திற்கு எதிரான அனாச்சாரங்களுமாக காட்சியளித்த இந்த மரம் மாபெரும் ஏகத்துவ பிரச்சாரத்தால் பட்டு போனது எல்லப் புகழும் இறைவனுக்கே.
இதே போன்று சமுதாயத்தில் வேரூன்றி இருக்கும் வரதட்சணை, மற்றும் நபிவழிக்கு மாற்றமான அனாச்சார திருமணங்களும் இதனால் பாதிக்கப்படும் சமுதாய பெண்களும், பெண்களைப் பெற்றவர்களின் அவல நிலைகளை மிக துல்லியமாக விளக்கி மஸ்ஜிதுல் முபாரக்  பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றது.
ஆனால் பெயர்தாங்கி முஸ்லிம்களும் தங்களை தவ்ஹீத் போர்வையில் வைத்திருப்பவர்களும் திருமணத்தின் போது தங்கள் ஆண்மையை பெண் வீட்டார்களிடம் விலை கேட்டு பேரம் பேசி விற்று விடுவதும்  நடந்து கொண்டு தான் உள்ளது.
உலக ஆதாயத்திற்காக தங்களை விலைக்கு விற்கும் ஆண் மகன்களும் இவர்களை ஈன்றவர்களும் சமுதாயத்தின் மாபெரும் துரோகிகள் என்றாலும் மிகையாகாது இந்த சமுதாய சீரழிவில் இவர்களின் பங்கு என்ன என்ற பட்டியலை பார்ப்போம்
பெண் குழந்தை பிறந்த செய்தி அறிந்த பெற்றோர்களின் முகம் மலர்ந்தாலும் மனம் வாடி விடுகின்றனர். இக் குழந்தைக்காக பல இன்னல்கள் இடையே திருமணத்திற்காக மார்க்கம் அனுமதித்த அல்லது அனுமதிக்காத வழிகளில் சேமிக்க் தொடங்குகின்றனர்.
இதை போன்று திருமணத்தின் போது கடன் கேட்டு தெரிந்தவர் உறவினர் என்று பெற்றோர்கள் அலைகின்றனர். இவ்வாறு பண உதவி கிடைக்க பெறாத ஏழ்மையான பெற்றோர்கள் பெண்ணை பெற்ற தகப்பனார்கள் ஜமாஅத்தின் கடிதத்துடன் மற்ற ஊர்களின் பள்ளிவாசல்கள் சென்று தொழுகைக்கு பிறகு குமராளி வந்திருக்கிறேன் பாவா ஏதாவது உதவி செய்யுங்க என்று பள்ளிக்கு வெளியே துண்டு ஏந்துகிறார்கள். இந்த துண்டை ஏந்துவதற்கு முன் இவர் தன் ஊரில் மிகவும் தன் மானத்துடனும் கவுரவுமாக வாழ்ந்திருப்பார் மற்றவரிடம் 100 ரூபாய் கடன் கேட்பதற்கும் கூச்சப்பட்டுயிருப்பார். இப்படி பட்டவர் பள்ளியில் துண்டுயேந்தி நிற்கும் போது அதில் 5 ரூபாய் போட்ட ஒருவன் இப்படி எத்தனை பேர் கிளம்பியுள்ளீர்கள் என்று ஏளனமாகக் கூட கேட்பான்.
இந்த வார்த்தையை கேட்ட துண்டு ஏந்திய தகப்பனின் மனம் அந்த வினாடியே இறந்துவிடும் இந்நிலையில்; தன் மகளின் முகத்தை நினைவில் கொண்டு தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கி கொள்வார்.
அரபு நாடுகளில் வீட்டிலும் வெளியேயும் பணிபுரியும் வயது முதிர்ந்த இளைஞன் பார்த்து இன்னும் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறாய் என்று கேட்டால் என் சகோதரிக்கு திருமணம் முடித்து வைத்துள்ளேன். இன்னும் ஒரு சகோதரி உள்ளார். அவளுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் என்கிறான். சிறிய வயதிலேயே மீசை வரைந்து வளைகுடா வந்தான். தற்போது மீசை முளைத்து அதுவும் நரைத்து விட்ட கொடுமை காரணம் கேட்டால் வரதட்சணை என்ற வன் கொடுமைதானே?
இது போன்று அரபு நாடுகளில் பணிபரியும் 80 சதவீதத்தினர் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டால் எனக்கு திருமண வயதில் மகள்கள் உள்ளனர் என்றும் சகோதரிகள் உள்ளனர் என்றும் பதில் வரும்.
இது போன்று இங்கு அரபு நாட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் இவர்கள் காலை முதல் இரவு வெகுநேரம் வரை கடினமான உழைப்பிற்கு ஆளாகி கொண்டுள்ளனர். சில வீடுகளில் மனித நேயம் என்பதோ இரக்கம் என்பதோ இவர்கள் பெண்கள் பலவீனர்கள் என்ற இரக்க குணம் இல்லாதவர்களும் இங்கு அரபு வீடுகளில் முதலாளியும் முதலாளி அம்மாக்களும் உள்ளனர்.
இவ்வாறு கடின உழைப்பில் அல்லல் படும் பெண்களின் பின்னனி பார்த்தால் இவர்கள் மகள்களை பெற்ற தாய்களும் சகோதரிகளை கொண்ட பெண்களும் அடங்குவார்கள்.
மேற்கண்ட இந்த சமுதாய சீரழிவின் பட்டியல் இன்னும் நிறையவே உள்ளது. இதை படிப்பவர்களின் பொறுமையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது
இறுதியாக திருமணமாகாத வயது முதிர்ந்த பெண்கள் தங்கள் வயதுடைய பெண்கள் திருமணமாகி கையில் குழந்தையுடன் கணவருடன் சந்தோசமாக வாழும் பெண்களை பார்த்து மனம் வெதும்புகின்றனர். தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டும் இறைவனுக்கும் தன் குடும்ப கவுரவத்திற்கும் பயந்து தனக்கு கீழே உள்ள உடன் பிறந்த சகோதரிகளின் எதிர் காலத்தை நினைவில் கொண்டும் பொறுமை காத்து வாழ்நாட்களை கடத்துகின்றனர்.
ஆனால் இவ்வாறு சக்தி பெறாத முஸ்லிம் பெண்மணிகள் அக்கம் பக்கம் உள்ள கயவர்களின் ஆசை வார்த்தையை நம்பி தம் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர். இவ்வாறு அழைத்து செல்பவன் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதற்காகவா இல்லை தன் இச்சை தீர்ந்தவுடன் இந்த பெண்ணை தவறான வழியின் பக்கம் தள்ளிவிடுகின்றான்.
குழந்தை பருவத்தில் மதரஸா சென்று அல்குர்ஆன் படித்து மார்க்கத்தின் அடிப்படையில் வளர்ந்த தூய்மையான நம் சமுதாய பெண் பல  சமூக விரோதிகளின்; கைகளில் அல்லல்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்டதற்கு காரணங்கள் என்ன இதற்கு யார் பொறுப்பு? இஸ்லாமிய சகோதர சகோதரிகளே சிந்திக்க வேண்டாமா இது போன்ற அவல நிலைகள் களையப்பட வேண்டுமாயின்
•       நாம் நபி(ஸல்) அவர்களின் வழிக்கு முரணான வரதட்சணை திருமணத்தை புறக்கணிக்க வேண்டும்.
•       இது தவிர வரதட்சணை நிர்ணயம் (பேரம் பேசும்) செய்யும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி திருமணத்திற்கு முன் பின் நடக்கும் வீண் விரய அனாச்சாரங்களை புறக்கணிக்க வேண்டும்.
இவை தவிர நபி (ஸல்) வழிக்கு உட்பட்ட வரதட்சணையில்லா இஸ்லாமிய திருமணம், திருமணத்திற்கு பிறகு மாப்பிள்ளை விருந்தான வலிமா போன்ற இஸ்லாமிய திருமண முறைகளை பின்பற்றுபவர்களையும் இவ்வாறு செய்ய முன் வரும் மணமகன் மற்றும் குடும்பத்தினருக்கு நாம் ஆதரவு தருவோம்.
எல்லாம் வல்ல இறைவன் மார்க்கத்தின் அடிப்படையில் சிந்தித்து செயல்படும் நன் மக்களாகவும் மறுமையில் வெற்றி பெற்றவர்களாகவும் நம்மை ஆக்குவானாக! ஆமீன்!
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment