بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

சுவனத்திற்குண்டான வழிகள்

                                                                         முஹிப்புல்லாஹ் உமரீ

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மணிமொழிகளில் சொர்கத்திற்கு நம்மை கொண்டு செல்லும் காரியங்கள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்
இணைவைக்காதவர்: அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் சுவர்க்கம் புகுவார் என்று முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(நூல்: புகாரி 126)
பள்ளிவாசல் கட்டுவது: உஸ்மான்(ரலி) பள்ளியை விரிவுபடுத்தியபோது நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள் என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் எழுப்புவான்; என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) கூறினார்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் கவ்லானி(ரஹ்) நூல்: புகாரி (450)
ஐவேளைத் தொழுகை, நோன்பைப் பேணுவது: அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2790)


சுப்ஹு, அஸரையும் பேணுவது: பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.  
 (நூல்: புகாரி (574)
அதிகமாக பள்ளிவாசலுக்கு செல்வது: பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.          
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 662)
நாவைப் பேணுவது: தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
(அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) நூல்: புகாரி 6474)
தினமும் சுன்னத்தான 12 ரக்அத்களை பேணுவது: யார் கடமையான தொழுகையல்லாத பன்னிரன்டு ரக்அத்கள் ஒரு நாளைக்குத் தொழுவாரோ அவருக்குச் சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ முஸா(ரலி) நூல்: அஹ்மத் 18877)
மார்க்கக் கல்வியை தேடுவது: யார் கல்வியை தேடி செல்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகின்றான்.
 (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 2699)
பாங்கு சொல்பவரைப் பின்தொடாந்து அதையே கூறுவது: பாங்கு கூறக்கூடியவர் அல்;லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் என்று கூறினால் உங்களில் ஒருவர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் எனக்கூறுவார். அதன் பிறகு பாங்கு கூறும் அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் எனக்கூறுவர் அதைக் கேட்பவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவர். அதன் பிறகு பாங்கு கூறும் அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் எனக் கூறுவார். அதைக் கேட்பவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் எனக் கூறுவார். அதன் பிறகு பாங்கு கூறுபவர் ஹய்ய அலஸ்ஸலாஹ் எனக் கூறுவார். அதைக் கேட்பவர் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் எனக் கூறுவார். அதன் பிறகு பாங்கு கூறுபவர் ஹய்ய அலல் ஃபலாஹ் எனக் கூறுவார். அதைக் கேட்பவர் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் எனக் கூறுவார். அதன் பிறகு அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் எனக் கூறுவார். அதைக் கேட்பவர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக் கூறுவார். அதன் பிறகு பாங்கு கூறுபவர் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவார். அதைக் கேட்பவர் மனதார இதயத்திலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறினால் சுவனம் புகுந்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்: முஸ்லிம் 385)
உளுச் செய்த பின் ஓதும் துஆ: உளுச் செய்த பின் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரஸுலுஹி என்றோ அல்லது அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு என்று யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும் அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 397)
பின்வரும் துஆவை ஓதுவது: எவரொருவர் ரழீத்து பில்லாஹி ரப்பன் வபில் இஸ்லாமி தீனன் வபிமுஹம்மதின் (ஸல்) நபிய்யன் என கூறுகிறாரோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: முஸ்லிம் 1884, அபூதாவூத் 1306)
லாயிலாஹ இல்லல்லாஹ் கூறி மரணித்தல்: நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்றார்கள். நான் (மீண்டும்) 'அவர் விபசார புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)' என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)' என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: புகாரி 5827)
பின்வரும் திக்ரை கூறுவது: எவரொருவர் ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபிஹம்திஹி என்று கூறினால் சுவனத்தில் அவருக்கு ஒரு பேரீச்சம் மரம் நட்டப்படும் என்று கூறினார்கள்.       
 (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: திர்மிதி (3386)
மூன்று காரியங்களிலிருந்து விலகிய நிலையில் மரணித்தல்: எவரொருவர் மூன்று காரியங்களிலிருந்து விலகியருக்கும் நிலையில் மரணமடைந்தால் அவர் சுவனம் புகுவார். அவையாவன பெருமை, மோசடி, கடன்.
(அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: திர்மிதி 1497)
சுவனம் வேண்டி துஆ செய்தல்: எவர் ஓரவர் அல்லாஹ்விடம் சுவனத்தை மூன்று முறை கேட்டால் சுவனம் யாஅல்லாஹ்! நீ அவரை சுவனத்தில் நுழைவிப்பாயாக! என்று கூறுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: திர்மிதி 2495)
எப்பொழுதும் உண்மை பேசுவது: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார்.      
 (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: புகாரி 6094)
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது: இறைவழியில் போரிடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை அவரின் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 3123)
மூன்று காரியங்களைப் பேணுவது: மனிதர்களே! நீங்கள் ஸலாமைப் பரப்புங்கள்,(ஏழைக்கு) உணவளியுங்கள், மனிதர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது (தஹஜ்ஜத்) தொழுங்கள்.(இவற்றைப் பேணினால்) சுவனத்தில் ஸலாமத்தோடு நீங்கள் நுழைவீர்கள்.                       
 (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: திர்மிதி 1778)
ஒப்புக் கொள்ளப்படும் ஹஜ்: 'ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1773)
அல்லாஹ்வின் திருநாமங்களை மனனம் செய்வது: அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.                                               
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2736)
மக்களுக்கு தொல்லை தருபவற்றை அகற்றுவது: மக்களுக்கு பாதையில் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மரக்கிளையை ஒi;றை ஒரு மனிதர் அகற்றியதினால்(அவர்) சுவனத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1914)
பாவமன்னிப்பு துஆ: அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன(த்);த  கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(;க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின் ஷர்ரி மா ஸனஃ(த்)து அபுவுல(க்)க பினிஃம(த்)தி(க்)க அலய்ய. வஅபுவு ல(க்)க பிதன்பீ பக்பிர்லீ பஇன்னஹு லா யஃபிருத் துனூப இல்லா அன்(த்)த. என்று ஒருவர் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                 
(அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ்(ரலி) நூல்: புகாரி 6309)
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment