بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முன்மாதிரி முஸ்லிம் வீடு

               இவ்வுலகில் மனிதன் பெறுகின்ற அருள்களில் வீடும் ஒன்றாகும்.ஏனெனில் வீடு கட்டுவது அவ்வளவு சிரமான காரியமாகும்.அதற்கு தமிழக மக்களிடம் வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை நடத்திப்பார் பழமொழி ஒன்று உண்டு.வீடு என்பது வெயிலிருந்தும், குளிரிலிருந்தும், மழையிலிருந்தும் மனிதனின் உடல் ஆரோக்கியம், உடமைகள், மனைவி மக்கள் ஆகியோரை பாதுகாக்கும் கேடயமாகவும், உண்பதற்கும், உறங்குவதற்கும்,குடுபத்தின் அங்கத்தினரை சந்திப்பதற்காகவும் மற்றும் இதர காரியங்களை நிறைவேற்றுவதற்காகவும் பயன்படுகின்றது.இத்தகைய வீடு அமைதிகளமாக இருந்தால் தான் மனிதனின் மனம் அமைதிபெறும் அதற்கான வழிகாட்டுதலை அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு கூறியுள்ளதை இங்கே காண்போம்.

வீடு எனும் இறைவனின் அருளாகும்

          உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும் ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள்.செம்மறி ஆட்டு ரோமங்கள் வெள்ளாட்டின் ரோமங்கள் ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான். 
(அல்குர்ஆன் 16:80)



            வாழ்வதற்கு வீடின்றி அலைவது இறைவனுடைய சோதனையாகும். யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இறைவன் அவர்களை சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றி தண்டனை வழங்கினான்.

        அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான்.அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை.தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர்.அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான்.
(அல்குர்ஆன் 59:2)

         அன்பானவர்களே! முஸ்லிம்களாக இருக்கக்கூடிய நாம் நமது வீட்டை அல்லாஹ்வின் அருள் நிறைந்த வீடாக ஆக்குவதோடு மறுமையில் சுவனத்தை பெற்றுத்தரக்கூடியதாக மாற்றிடுவோடுமாக! அதற்குரிய வழிகாட்டுதலைப் பார்ப்போம்.

வீட்டில் பிரத்யோகமாக தொழுமிடத்தை ஏற்படுத்தவது

            அன்பானவர்களே! முஸ்லிம் அல்லாத மதத்தவர்கள் சமயத்தவர்கள் தங்கள் வீடுகளில் தங்களின் கடவுளர்களை வணங்கி வழிபட வேண்டும் என்பதற்காகவே தனி பூஜை அறை என்று ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர்.நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டிருந்தாலும் நமது வீடுகளில் சமையல் அறை விருந்தினர் தங்கும் அறை தூங்கும் அறை படிக்கும் அறை குளியல் அறை என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அறைகளை அமைத்திருப்பது போன்று அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கென்று பிரேயர் ஹால் என்று ஒரு அறையையோ அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியையோ உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கும் ஒரு முன்மாதிரியை மூஸா(அலை) அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம் அல்லாஹ் கூறுகிறான்.

           மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள் உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள்.மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக! என்று வஹீ அறிவித்தோம்.     (அல்குர்ஆன் 10:87)

மேலும் நபி(ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

           உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!

(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 432)

        பார்வையற்ற இத்பான் பின் மாலிக்(ரலி) அவர்கள் தம் சமுதாயத்திற்கு இமாமத் செய்பவராக இருந்தார்.(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது! நானோ பார்வையற்றவன் எனவே நீங்கள் என் வீட்டில் வந்து தொழுங்கள் அவ்விடத்தை நான் தொழுமிடமாக்கிக் கொள்கிறேன் என்றார் நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்று நான் எங்கே தொழ வேண்டும் என விரும்புகிறீர்? என்று கேட்டார்கள். அவர் வீட்டில் ஓர் இடத்தைக் காட்டினார். அவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

                (அறிவிப்பவர்: மஹ்மூத் இப்னு ரபீஃ நூல்: புகாரி 667)

              உங்களில் ஒருவர் தம்(பர்லான) தொழுகையை முடித்துக் கொண்டால்தம் தொழுகையின் ஒரு பகுதியை தம் வீட்டில் ஆக்கிக் கொள்ளட்டும்.நிச்சயமாக அவர் வீட்டில் தொழுவதின் காரணமாக அல்லாஹ் அவருக்கு அங்கு நலவை ஏற்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                       (அறிவிப்பவர்:ஜாபிர்(ரலி) நூல்:முஸ்லிம் 1298)

               நபி (ஸல்) அவர்கள் மக்களே! (உபரியான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும்.கடமையான தொழுகையைத் தவிர என்று கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி_) நூல்: புகாரி 731)

       பெண்கள் பள்ளிவாசலில் வந்து ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் எந்தவொரு தடையும் இல்லை.இருப்பினும் பெண்கள் ஐவேளை தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் வீட்டிலேயே தொழுவது மிகவும் சிறந்தது. மேலும் ஆண்கள் சுன்னத்தான தொழுகையைத் தொழுவதன் மூலம் நம்முடைய குழந்தைகள் அதனைப் பார்த்து அவர்களும்தொழுகை முறையை அறிந்து கொள்வதற்கும் தொழுகையின் பால் நாட்டம் கொள்வதற்கு தோதுவானதாக அமையும்.

குடும்பத்தாரை தொழுமாறு ஏவுதல்

        (முஹம்மதே) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! 
(அல்குர்ஆன் 20:132)

வீட்டில் குர்ஆன் ஓதுதல்

      உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.                    
 (அல்குர்ஆன் 33:34)

       இறைவனை நினைவு கூறப்படும் வீட்டிற்கும், நினைவு கூறப்படாத வீட்டிற்கும் நபி (ஸல்) அவர்கள் காட்டும் உவமையைப் பாருங்கள்.

   அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படும் வீட்டின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும் அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படாத வீட்டின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.

                  (அறிவிப்பவர்: அபூ மூஸா(ரலி) நூல்: முஸ்லிம் 1429)

         உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.அல்பகரா எனும் (இரண்டாவது)அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.         
 (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1430)

        அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான்.அந்த ஏட்டிலிருந்த இரண்டு வசனங்களை அருளினான்.அந்த இரண்டைக் கொண்டு சூரத்தல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அந்த வீட்டை நெருங்கியே தீருவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

            (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதி 2807

            இரவில் தூங்கச் செல்லும் போது நீ ஆயத்துல் குர்ஸியை ஓதிக் கொண்டால் காலை வரை அல்லாஹ்விடத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் வந்து பாதுகாத்துக் கொள்வார். ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                  (அறிவிப்பவர்: அபுஹூரைரா(ரலி) நூல்: புகாரி 3375)

         ஒரு மனிதர் சூரத்துல் கஹ்பை இரவில் ஓதிக் கொண்டு இருந்தார். அவரிடத்தில் ஒரு குதிரை இருந்தது. அது இருகயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. அப்பொழுத ஒரு மேகம் அவரைச் சூழ்ந்து அவரிடம் நெருங்கி வர ஆரம்பித்தது. அதைக் கண்ட அவரது குதிரை விரண்டோட ஆரம்பித்தது.அதைக் கண்டு அவரது குதிரை விரண்டோட ஆரம்பித்தது. பின்னர் அவர் காலையில் நபியவர்களிடம் வந்து இரவு நடந்த விபரத்தைக் கூறினார். அதற்கு நபியவர்கள் அது குர்ஆனுக்காக (குர்ஆன் ஓதியதற்காக) இறங்கிய ஸகீனத் (நிம்மதியும் சாந்தியும்) ஆகும் எனக் கூறினார்கள்.        
(அறிவிப்பவர்: பரா இப்னு ஹாஸிப்(ரலி) நூல்: புகாரி 3614)

           அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்வதற்கான நினைவூட்டலே அல்குர்ஆனும் தொழுகையாகும். அவற்றை விட்டு விடுகின்றவன் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்து விடுபடுகிறான். அல்லாஹ்வை மறந்து விட்ட பிறகு ரஹ்மத் எப்படி கிடைக்கும்? வீடு எப்படி அமைதிக்குரியதாக அமையப் பெறும்?


வீட்டில் உள்ளவர்கள் நோயுற்றால்


        தங்கள் குடும்பத்தினர்களில் எவராது நோயுற்றால் அவர்கள் மீது முஅவ்விதத்தைன் (பலக், நாஸ்) என்று சொல்லக்கூடிய இரண்டு அத்தியாயங்களை ஓதி அவர்கள் மீது ஊதக் கூடியவர்களாக நபியவர்கள் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம் 4065)


வீட்டிலுள்ள பெண்கள் விசயத்தில் கவனிக்க வேண்டியது: 
         ஒரு மனிதர் நபியவர்களிடம் ஒருவருக்கு தன் மனைவி மீதான கடமை என்ன? என்று கேட்டார் அதற்கு நபியவர்கள் அவன் சாப்பிடும் போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும் அவன் ஆடை அணியும் போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். அவளை முகத்தில் அறையக்கூடாது.அவளை இழிவாக திட்டாதே! வீட்டிலே தவிர வேறு இடத்தில் அவளை கண்டிக்க வேண்டாம் என நபியவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர்: மூவியா இப்னு ஹைதா(ரலி) நூல்: இப்னுமாஜா 1840)

          மேலும் (மக்களில்) யாராவது பொய் சொல்லி விட்டார்கள் என்று தெரிந்தால் அவர்கள் அதற்காக மன்னிப்புக் கோரும் வரைக்கும் நபி(ஸல்) அவர்கள் அந்த நபரைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

                   (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: அஹமத் 24027)
குடும்பத்தாருடன் இரக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்ளல்

     நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். சங்கைக்குரியோனும் புகழுக்குரியோனுமாகிய அல்லாஹ் (ஒரு) குடும்பத்தவர்களுக்கு நல்லதை நாடி விட்டான் என்றால் அவர்களுக்குள் பரஸ்பரம் இரக்க மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவான் 
(நூல்: அஹமத் 6-71 ஸஹீஹ் ஜாமிஇ 303)

             ஷைத்தானை தூரப்படுத்துகின்ற இக்காரியங்களுக்கு மாற்றமாக நிகழ்வுகள் நடைபெறும் போது முஸீபத்துக்கள் நிறைந்த வீடாகவே அவ்வீடு மாறிவிடும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களால் துஆக்கள் அவ்ராதுகள் மற்றும் தொழுகைகளின் நேரங்களை நினைவில் கொள்ள முடியாத அவலங்களை பார்க்கும் போது மனம் வேதனை அடைகின்றது. பெண்களும் தொழுவதில்லை பிள்ளைகளையும் தொழ வைப்பதில்லை பொறுப்புக்குரிய கணவனும் ஏவுவதில்லை முற்றிலுமாக அல்லாஹ்வை மறந்த விட்டு ஷைத்தானுக்கான அனைத்த வழிகளையும் திறந்த விட்டு முகாமிட வழிவகை செய்து விட்ட பிறகு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரக்கத்தும் எப்படி இறங்கும்? சிந்தித்து செயல்படுவோமாக!





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment