முஹிப்புல்லாஹ் உமரி
இறைவன் கூறுகிறான். உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள் (அல்குர்ஆன் 4:29)
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 2:195)
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது.
ஒரு மனிதன் இஸ்லாத்தை முழுமையாக முறையாக பேணி வாழ விரும்பும் போது அனைத்து செய்கைகளையும் சிந்தித்து சீர் தூக்கிப் பார்த்து செயலாற்ற வேண்டியுள்ளது.இல்லையேல் மனித விரோதியான ஷைத்தான் நிச்சயமாக வழிகெடுத்து விடுவான். பொதுவாக மனிதன் சிந்தனை சக்தி நிறைந்தவன் சிந்திக்கக்கூடியவன்.ஆயினும் அனைவரும் சிந்தித்துத்தான் செயல்படுகிறார்கள் என்று கூற இயலாது. இங்கே நாம் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு செய்கைகளையும் நாம் சிந்தித்துச் செயலாற்றும் போது அது தீமைகளுடன்(ஷைத்தான்)கடுமையாக போராடும் வாழ்வாகவே அமையும். எனினும் அவ்வாறு வாழ முயற்சித்து வெற்றி காணும் வாழ்க்கையில் தான் இம்மை மறுமை மேன்மை கிட்டும்.மேலும் சமூக பண்பாட்டை வளர்ப்பதாலும் பிறர் நலனில் அக்கறை கொள்வதிலும் ஒரு பற்றுதலை ஏற்படுத்தும்.
உடல் நலம் : ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் ஆரோக்கியம் என்பது விலைமதிக்க முடியாத சொத்தாகும்.அதனை புகைப்பழக்கம், மூக்குப்பொடி, புகையிலை (ஹான்ஸ்,குட்கா,பான்பராக்,ஜைனி கைனி) போடுதல், மது அருந்துதல் ஆகிய தீய பழக்கங்களினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல், மூளை ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டு உயிர்கொல்லி நோய்களான ஹார்ட்அட்டாக், கேன்ஸர் போன்ற நோய்களுக்கு ஆளாவதோடு ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி, சிறுகுடல் வீக்கம், மூளை வறட்சி, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல நோய்களுக்கும் காரணமாகிறது.
உலக சுகாதார நிறுவன(WHO)த்தின் புள்ளி விவரங்களின் படி சென்ற வருடம் 5 மில்லியன் மக்கள் புகைத்தலின் காரணமாகவும், 6 இலட்சம் மக்கள் புகையிலைப் புகையை நுகர்ந்தின் காரணமாகவும் பலியாகியுள்ளனர் என்பது கவலைக்குரியது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் கூற்றுப் பொய்த்து இன்றைய இளைஞர்கள் நாளைய புகைஞர்கள் எனும் வகையில் 13 முதல் 18 வயதிற்குட்பட்ட புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 7ல் ஒன்றாக அதிகரித்திருப்பது நெஞ்சம் சுடும் விசயம். சர்வதேச ரீதியில் ஒவ்வொரு 8 செகன்டிற்கும் ஒருவர் புகையிலையால் இறப்பதுடன் இந்தியாவில் ஒவ்வொரு 6 செகன்டிற்கும் ஒருவர் இறக்கின்றனர்.
பெரும்பாலோரிடம் புகைப்பழக்கம் எந்த வயதில் எந்த நோக்கத்தில் எப்படி ஆரம்பமாகிறது என்று ஆராயும் போது டீன் ஏஜ் என்று சொல்லப்படக்கூடிய (13 முதல் 19 வயதில்;) தான் ஆரம்பமாகிறது. இதன் நோக்கம் என்னவெனில் சிலரிடம் பொழுது போக்காகவும், மாணவர்களிடத்தில் ஜாலியாகவும், ரவுடிகளிடத்தில் பந்தாவாகவும், ஒரு பெருமையான செயலாகவும் இப்பழக்கம் திகழ்கிறது.
சிறந்த முஸ்லிம் : ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர் யார்? எனக்கேட்டார். அதற்கு பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கரம் ஆகியவற்றின் தீமைகளிலிருந்து பாதுகாப்பு பெற்றார்களோ அவர்தான் சிறந்த முஸ்லிம் எனக்கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம்)
பீடி,சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்களின் வாய்களிலிருந்து கிளம்பும் துர்நாற்றம் எல்லோரையும் வெறுப்படையச் செய்கிறது. அது பிறருக்கு பெரும் தொல்லையைத் தருவதுடன் தொழுகையின் போது பக்கத்தில் இருப்பவருக்கு பெரும் கஷ்டத்தை உண்டாக்குகிறது.மூக்குப்படி உபயோகமும் இப்படித்தான் அதன் கழிவுகள் பள்ளிவாசல்களின் பாய்களிலும் விரிப்பிலும் படிந்து தொழுவோருக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது.
நாளென்று 4101 மில்லியன் புகையிலை உற்பத்திகள் விற்பனையாகின்றது. இதில் வருந்தத்தக்க விசயம் என்னவென்றால் அதிகமான பீடி தயாரிப்பாளர்களும், விற்பவர்களும், வாடிக்கையாளர்களும் முஸ்லிம்களாக இருப்பது தான்.மேலும் புகையிலை ரகங்களிலும் முன்னனியில் உள்ளனர்.
காரணம் யாதெனில்:
1. ஹலால்(ஆகுமானதும்), ஹராம் (தடுக்கப்பட்டதும்) முறையாக அறிந்து கொள்ளாமை.
2. தவறு என தெரிந்தும் சொகுசான வாழ்க்கை வாழ பணம் சேகரிக்கும் முயற்சியில் ஏற்படுத்திக் கொண்ட எளிய வழி
3. இறையச்சம் இல்லாமை
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் மீது ஒரு காலம் வரும் அப்பொழுது மனிதன் அக்காலத்தவரிடமிருந்து தான் அடையும் எதையும் ஹலாலானதா அல்லது ஹராமானதா என்பதைப் பொருட்படுத்தமாட்டான்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி)
இறுதியாக சிந்திக்க சில விசயங்கள்!
உலகம் இவ்வளவுதான் : அல்லாஹ் கூறுகிறான். அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமுமேயாகும். மேலும் உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருட்களையும் சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும் எனவே (உலக வாழ்க்கையில்) மயங்கியோருக்கு மறுமையில் கடுமையான வேதனை உண்டு. முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும் அவனது பொருத்தமும் உண்டு. ஆகவே இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 57:20)
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்.இன்னும் எவன் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை ஷைத்தான் மானக்கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும் செய்ய ஏவுவான். (அல்குர்ஆன் 24:21)
நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் (அல்குர்ஆன் 2:208)
வல்ல ரஹ்மான் நம் சமுதாய மக்கள் அனைவரையும் தவறான இழிவான தொழில்களை விட்டும் வீண் விரயங்களுக்கு துணை போவதை விட்டும் மாற்றி வேறு பல நல்ல பயனள்ள தொழில்களுக்கு அதிபர்களாக்கி வைப்பானாக!
0 comments:
Post a Comment