எல்லா மாதங்களும் அல்லாஹ்வுடைய மாதங்களாய் இருக்க இந்த மாதத்திற்கு மட்டும் அப்படியொரு அடைமொழி கொடுத்திருப்பது இதன் சிறப்பைப் பறைசாற்றுவதாக அமைகிறது. மகத்துவ மிக்க இந்த முஹர்ரம் மாதத்தில் ஒரு நாள் புனிதமிக்க நாளாகும். அந்த நாள் 'ஆஷூரா' எனும் பத்தாம் நாளாகும். இந்த ஆஷூரா நாளிற்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?
நபி(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்? இதில் நீங்கள் நோன்பு நோற்றுள்ளீர்களே?' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இது மகத்தான நாளாகும். இந்த நாளில் தான் மூஸாவையும் அவர்களின் சமுதாயத்தையும் அல்லாஹ் (ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனுடைய கூட்டத்தாரிடமிருந் தும்) காப்பாற்றினான். ஃபிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்தாரையும் (நீரில்) மூழ்கடித்தான். எனவே மூஸா (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காக இந்த நாளில் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்களும் இன்று நோன்பு நோற்கிறோம்' என்று கூறினார்கள். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'உங்களை விட மூஸாவுக்கு நாங்கள் தான் அதிக தகுதியும் உரிமையும் உடைய வர்கள்' என்று கூறி அந்த நாளில் நோன்பு வைத்தார்கள். பிறரையும் நோன்பு நோற்குமாறு உத்திர விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி(2004) முஸ்லிம்(1130)
மூஸா(அலை)அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு மட்டுமே யாவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்து, அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அவர்களை அழைத்தார்கள். அன்றைய கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னிடமும் சென்று இந்த ஏகத்துவத்தை முழங்கினார்கள். அவன் அடிமைப்படுத்தியும் கொடுமைப்படுத்தியும் வந்த பனூ இஸ்ரவேலர்களை விடுவிக்கும்படியும் வேண்டினார்கள். மூஸாவை ஏற்றுக் கொண்ட மக்கள் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகினார்கள். ஆனால் ஃபிர்அவ்னோ கைதேர்ந்த சூனியக்காரர்களைக் கொண்டு வந்து மூஸாவிடம் போட்டி போடச் செய்தான். இறுதியில் தாங்கள் செய்தது வெரும் கண்கட்டி வித்தையே என்பதை உணர்ந்த சூனியக்காரர்கள் உடனேயே மூஸாவை ஏற்று ஏக இறைவனை நம்பிக்கை கொண்டார்கள். ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலும் பணிந்து விடாமல் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக நின்றார்கள். தோற்றுப் போன ஃபிர்அவ்ன் சினம் கொண்டு மூஸாவையும் அவரை ஏற்றுக் கொண்ட மக்களையும் அழித்தொழிக்க எண்ணி படை திரட்டி அவர்களைப் பின்தொடர்ந்தான். ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தார்களையும் அல்லாஹ் கடலில் மூழ்கடித்தான். மூஸாவையும் அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும் காப்பாற்றினான். இது மூஸா(அலை) அவர்களின் வரலாற்றுச்; சுருக்கம். (பார்க்க அல்குர்ஆன்: 7:103-126, 26:61-67)
இந்த வரலாறு தரும் பாடம் என்ன? அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு எந்த வகையிலும் இணை கற்பிக்கக்கூடாது. பணம் பட்டம் பதவி பவிசு என எதை இழந்தாலும் இந்த ஏகத்துவத்தை இழக்கக்கூடாது. துக்கம், துயரம், துன்பம் போன்ற சோதனைகள் ஏற்பட்டாலும் ஏகத்துவக் கொள்கையில் நிலையாய் உறுதியாய் இருக்க வேண்டும். இறுதி முடிவு சத்தியத்திற்கே. சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும். இந்தப் படிப்பினையைப் பெற்று நம் வாழ்க்கைப் பாதையை நாம் சீர்திருத்திக் கொள்வோமாக!
இந்த ஆஷூரா நாளில் நாம் நோன்பு நோற்பது சிறப்பாகும். 'ரமலானுக்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்' என்பது நபிமொழி. (முஸ்லிம்-1163) ஆஷூரா நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அது சென்ற வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும்' என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்-1162)
நபி(ஸல்)அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டபோது ஷஅல்லாஹ்வின் தூதரே! இந்த நாள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்தும் நாளாயிற்றே| என்று தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள் 'அல்லாஹ் நாடினால் எதிர் வரும் ஆண்டில் ஒன்பதாம் நாளும் சேர்த்து நோன்பு நோற்போம்' என்று கூறினார்கள். ஆனால் அடுத்து ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். முஸ்லிம்(1134) நபி(ஸல்) அவர்கள் எல்லா காரியங்களிலும் யூத, கிறிஸ்தவர்களுக்கு மாற்றமாக நடக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு முஹர்ரம் 9-ம் நாளும் 10-ம் நாளும் நோன்பு வைப்போமாக.
இதை விட்டுவிட்டு நபி(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு முஹர்ரம் 10- ல் நடந்த கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்காக அதனை துக்க தினமாக அனுஷ;டிப்பதும் அதை ஓட்டி பஞ்சா எடுப்பதும் முகத்திலும் மார்பிலும் அடித்துக் கொள்வதும் இன்னும் சில பகுதிகளில் நடப்பது போல கொளுக்கட்டை சுட்டு ஹுஸைன் (ரலி) அவர்கள் பெயரில் பாத்திஹா ஓதுவதும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத்துகளாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் சத்தியத்தை சத்தியமெனக் காட்டி அதைப் பின்பற்றி நடக்க அருள் புரிவானாக! அசத்தியத்தை அசத்தியமெனக் காட்டி அதிலிருந்து தவிர்ந்து கொள்ளவதற்கு உதவி செய்வானாக!
0 comments:
Post a Comment