- முஹிப்புல்லாஹ் உமரி
கண்ணியத்திற்குரியோர்களே!
அரபு மாதங்களில் ஒன்றான ஸஃபர் மாதத்தை பிற மதத்தவர்கள் ஆடி மாதத்தை பீடையாக கருதி அதில் நற்காரியங்கள் எதனை தொடங்காமல் அப்பீடையை கழிப்பதற்காக பல வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வருவதைப் போன்று முஸ்லிம்கள் பீடையாக கருதி அம்மாதத்தின் கடைசி புதன் அன்று கடற்கரைகளுக்கோ, ஆற்றங்கரைகளுக்கோ சென்று குளித்து பீடையை கழிப்பர் அல்லது புல்வெளிகளில் நடந்து பீடையை கழிப்பர் அல்லது மாவிலைகளில் ஸலாமுன் கவ்லன் மிர்ரப்பிர்ரஹீம் என்பன போன்ற வாசகங்களை எழுதி கரைத்துக் குடித்து பீடையை கழிப்பர். இவற்றிற்கெல்லாம் மார்க்கத்தில் துளியவும் அனுமதியும் இல்லை ஆதராரமும் இல்;லை என்பதை புரிய வேண்டும் ஏனெனில்
ஜாஹிலியா காலத்து மக்கள் ஸஃபர் மாதத்தை பீடையாக கருதினார்கள். இதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் என்பது நீங்கள் நினைப்பது போல் பீடை இல்லை என்று கூறினார்கள்.
(நூல்: அபூதாவூத் 3414)
மற்றொரு அறிவிப்பில்
தொற்று நோயும் பறவை சகுனமும் ஸஃபர் (பீடை) என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 5707
இன்னும் சொல்லப் போனால் அறியாமை கால மக்கள் அரபு மாதங்களில் மற்றொரு மாதமான ஷவ்வால் ஐயும் பீடையாக கருதி வந்தார்கள்.
அதுவும் பீடை மாதம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில்,
தன்னை ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள் அம்மாதத்தில் தான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: முஸ்லிம் 2782
இது போன்ற அறியாமைகால மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழித்துக் காட்டிய இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களில் சிலர் மூடநம்பிக்கைகளை புகுத்தி அதை பின்பற்றி வருவதும் வருந்தத்தக்க விசயமாகும்.
அறியாமைகாலத்தில் அனைத்து விதமான மூடப் பழக்கவழங்கள் நம்பிக்கைகள் சம்பிரதாயங்கள் யாவற்றையும் தங்கள் காலில் போட்டு மிதித்து இல்லாமல் ஆக்கிவிட்டு நபி (ஸல்) அவர்கள் சென்றுள்ளார்கள். அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் இச்செய்தியையும் கூறியுள்ளார்கள்.
அறிந்து கொள்ளுங்கள்! அறியாமை காலத்தின் அனைத்து காரியங்களும் என் பாதங்களுக்கு கீழே புதைக்கப்பட்டவையாகும்
(நூல்: முஸ்லிம் 2334)
இவ்வளவு தெளிவாக நபியவர்கள் விளக்கிக் கூறியதற்குப் பிறகும் ஸஃபர் மாதத்தின் கடைசி புதனை ஒடுக்கத்துப் புதனாக அனுஷ்டித்து வருவதை என்னவென்று சொல்வது?
நாட்கள் யாவும் அல்லாஹ்வால் வழங்கப்பட்டவையாகும் அதில் இது நல்ல நாள் இது கெட்ட நாள் என்று பிரிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை அவ்வாறு பிரிப்பதின் மூலம் அல்லாஹ்வையே நோவினை செய்கிறார்கள் ஏனெனில்
ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான் அவன் காலத்தை ஏசுகிறான் நானே காலம் (படைத்தவன்) என் கையிலே அதிகாரம் உள்ளது நானே இரவு பகலை மாறிமாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 4826
மேலும் ஒவ்வொரு மனிதருக்கும் நோய், துன்பம் வருவது இறைவன் வகுத்த நியதியாகும். அது இம்மாதத்தில் இந்த நாளில் தான் வரும் என்பதெல்லாம் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானதாகும் ஏனெனில் அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத்தவிர அதை நீக்குபவன் யாருமில்லை உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அளிப்பான் அவன் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்
(அல்குர்ஆன் 10: 107)
இறுதியாக முஸ்லிம்கள் யாவரும் காலமாக இருக்கும் இறைவன் நல்ல நேரம் கெட்ட நேரம் நல்ல நாள் கெட்ட நாள் நல்ல மாதம் பீடை மாதம் என்றெல்லாம் ஜாஹிலிய்யா மக்களைப் போன்று மூடநம்பிக்கைளில் மூழ்கி விடாமல் அல்லாஹ் திருக்குர் ஆனில்,
அல்லாஹ் எங்களுக்கு விதத்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது அவன் எங்கள் அதிபதி நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக
(அல்குர்ஆன் 9:51)
அல்லாஹ் திருக்குர் ஆனில் கூறியதைப் போன்று நம்பிக்கைக் கொண்டு ஈமானைப் பாதுகாத்து ஈருலகிலும் ஈடேற்றம் அடைய முயற்சிப்போமாக! அதற்கு வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக!
0 comments:
Post a Comment