எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா
பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்து தான். ஸாரா (அலைஹஸ் ஸலாம்) அவர்கள் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்து கொண்டார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள்.
ஹாஜர் (அலை) : இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, ''இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்கüடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள்.
ஹாஜர் (அலை) : ''அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?'' என்று கேட்க,
இப்ராஹீம் (அலை) : 'ஆம்' என்று சொன்னார்கள்.
ஹாஜர் (அலை) : ''அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
இப்ராஹீம் (அலை) : (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்:
''எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்.) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர் களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்'' என்று இறைஞ்சினார்கள். (அல் குர்ஆன் 14:37)
இஸ்மாயீலின் அன்னை : இஸ்மாயீலுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட போது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார்.
ஜம்ஜம் தணணீர் : தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை.... அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை.... அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தன் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச் சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ''இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற 'சஃயு' (தொங்கோட்டம்) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ஹாஜர் (அலை) : பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்ட போது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ''சும்மாயிரு'' என்று தமக்கே கூறிக் கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ''(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்கüடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)'' என்று சொன்னார்கள்.
வானவர் : அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே ஹாஜர் (அலை) கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். ...அல்லது ''தமது இறக்கையினால் தோண்டினார்கள்'' என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்... அதன் விளைவாகத் தண்ணீர் வெüப்பட்டது. '
ஹாஜர் (அலை) அதை ஒரு தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (''ஓடிவிடாதே! நில்'' என்று சைகைசெய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.
''நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்கüன் அன்னைக்குக் கருணை புரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்... அல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்கா விட்டால்.... ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்' என்று சொன்னார்கள்'' என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள்.
வானவர் : ஹாஜர் (அலை) அவர்களிடம், ''நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்'' என்று சொன்னார். இறையில்லமான கஅபா, மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக் கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.
ஜுர்ஹும் குலம் : இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர்.... அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்.... அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் 'கதா' எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு, ''இந்தப் பறவை தண்ணீரின் மீதுதான் வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும்; நாம் இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே'' என்று (வியப்புடன்) பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்த போது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார், இஸ்மாயீலின் அன்னை தண்ணீரருகே இருக்க முன்னே சென்று, ''நாங்கள் உங்கüடம் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியüப்பீர்களா?'' என்று கேட்டனர்,
ஹாஜர் (அலை) : ''ஆம் (அனுமதியüக்கிறேன்); ஆனால், தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது'' என்று சொன்னார்கள்.
ஜுர்ஹும் குலம் : ''சரி'' என்று சம்மதித்தனர்.
'' '(ஜுர்ஹும் குலத்தார் தங்கிக் கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு, அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்...'' என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்யனுப்ப, அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன.
இப்ராஹீம், இஸ்மாயீல் (அலை) முதல் மனைவி : குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக் கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்குப் பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்து விட்டார்.
இப்ராஹீம் (அலை) : இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள்.
இஸ்மாயீல் (அலை) முதல் மனைவி : ''எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்'' என்று சொன்னார்.
இப்ராஹீம் (அலை) : அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்
இஸ்மாயீல் (அலை) முதல் மனைவி : அதற்கு அவர், ''நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்'' என்று முறையிட்டார்.
இப்ராஹீம் (அலை) : ''உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரைத்து அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல்'' என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் (அலை) : (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே, ''எவரேனும் உங்களிடம் வந்தார்களா?'' என்று கேட்டார்கள்.
இஸ்மாயீல் (அலை) முதல் மனைவி : ''ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார்; எங்கüடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விபரம்) தெரிவித்தேன். என்னிடம், 'உங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?' என்று கேட்டார். நான் அவரிடம், 'நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்' என்று சொன்னேன்'' என்று பதிலத்தார்.
இஸ்மாயீல் (அலை) : ''உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?'' என்று கேட்டார்.
இஸ்மாயீல் (அலை) முதல் மனைவி : , ''ஆம்; உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும் படி எனக்கு உத்திரவிட்டு, 'உன் நிலைப் படியை மாற்றிவிடு' என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்'' என்று பதிலüத்தார்.
இஸ்மாயீல் (அலை) : ''அவர் என் தந்தை தான். உன்னை விட்டுப் பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்'' என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்து விட்டார்.
இஸ்மாயீல் (அலை) இரண்டாவது மனைவி : பின்னர், ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.
இப்ராஹீம் (அலை) : அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்.
இஸ்மாயீல் (அலை) இரண்டாவது மனைவி : ''எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்'' என்று சொன்னார்.
இப்ராஹீம் (அலை) : ''நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?'' என்று கேட்டார்கள் மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்.
இஸ்மாயீல் (அலை) இரண்டாவது மனைவி : ''நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்'' என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமான அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.
இப்ராஹீம் (அலை) : ''உங்கள் உணவு எது?'' என்று கேட்க
இஸ்மாயீல் (அலை) இரண்டாவது மனைவி : ''இறைச்சி'' என்று பதிலüத்தார்.
இப்ராஹீம் (அலை) : ''உங்கள் பானம் எது?'' என்று கேட்க,
இஸ்மாயீல் (அலை) இரண்டாவது மனைவி : ''தண்ணீர்'' என்று பதிலüத்தார்.
இப்ராஹீம் (அலை) : ''இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அந்த நேரத்தில் அவர்கüடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள்வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித் திருப்பார்கள். ஆகவே தான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதேயில்லை'' என்று சொன்னார்கள்.
இப்ராஹீம் (அலை) : ''உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்'' என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் (அலை) : அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, ''உங்களிடம் எவரேனும் வந்தார்களா?'' என்று கேட்க,
இஸ்மாயீல் (அலை) இரண்டாவது மனைவி : ''ஆம்; எங்கüடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்'' என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) ''என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், 'நாங்கள் நலமுடன் இருக்கிறோம்' என்று தெரிவித்தேன்'' என்று பதில் சொன்னார்.
இஸ்மாயீல் (அலை) : ''அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?'' என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள்.
இஸ்மாயீல் (அலை) இரண்டாவது மனைவி : ''ஆம்; உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்'' என்று சொன்னார்.
இஸ்மாயீல் (அலை) : ''அவர் என் தந்தை; நீ தான் அந்த நிலைப்படி. உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே (மனைவியாக) வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்'' என்று சொன்னார்கள்.
இப்ராஹீம் (அலை) : அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒருநாள்) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்த போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள்.
இஸ்மாயீல் (அலை) : இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடு நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.)
இப்ராஹீம் (அலை) : ''இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான்'' என்று சொன்னார்கள்
இஸ்மாயீல் (அலை) : ''உங்கள் இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று சொன்னார்கள்.
இப்ராஹீம் (அலை) : ''நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?'' என்று கேட்க
இஸ்மாயீல் (அலை) : ''உங்களுக்கு நான் உதவுகிறேன்'' என்று பதிலளித்தார்கள்.
இப்ராஹீம் (அலை) : ''அப்படியென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்டவேண்டுமென்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்'' என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டு வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவைக் கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலானார்கள். அப்போது இருவருமே,
''இறைவா! எங்களிடமிருந்து (இந்தத் புனிதப் பணியை) ஏற்றுக் கொள். நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்'' (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, ''இறைவா! எங்களிடமிருந்து (இந்த புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்'' (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (3364)
படிப்பினைகள் :
1. அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவன் அவனது கட்டளைகளுக்கு அடி பணியவேண்டும். தன் மனைவியாகவோ, மகனாகவோ இருந்தாலும் மற்ற எல்லோரை விடவும் அவனது நேசத்திற்கும் கட்டுப்படுதலுக்கும் முன்னுரிமையளிக்கவேண்டும். மனித இனமோ, தண்ணீரோ, புற்பூண்டுகளோ இல்லாத வனத்தில் தன் மனைவி ஹாஜரையும் மகன் இஸ்மாயீலையும் விட்டு வாரும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை இப்றாஹீம் (அலை) அவர்கள் நிறைவேற்றினார்கள்.
2. ''அப்படியானால் அல்லாஹ் எங்களைக் கைவிடமாட்டான். '' என்று சொல்வதின் மூலம் அல்லாஹ்வின் மீது தனக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன் நல்ல மனைவி, அல்லாஹ்வின் கட்டளைக்கும் தன் கணவனுக்கும் கட்டுப்பட்டு பொறுமையுடன் நடந்து கொள்வாள்..
3. ஒரு பையில் பேரீத்தம்பழமும் தோல் பையில் கொஞ்சம் தண்ணீருடனும் தன் பாலகன் இஸ்மாயீலையும் மனைவி ஹாஜரையும் வனத்தில் விட்டு விட்டு அவர்களுக்காக இப்றாஹீம் (அலை) ''எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்.) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்கüன் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர் களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்'' என்று இறைஞ்சினார்கள். (அல் குர்ஆன் 14:37). ஒரு மனிதன் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து விட்டுத்தான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை இது காட்டுகிறது.
4. ஹாஜரா(அலை) தன்னிடமிருந்தவை தீர்ந்து போனதும் ஸஃபா மர்வாவுக்கு மத்தியில் ஸம்ஸம் நீர் கிடைக்கும் வரை பல தடவை ஓடினார்கள். இதுவும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடன் முயற்சித்ததற்கான பிரதிபலன் ஆகும்.
5. ஒரு மனிதன் ஏதாவது அச்சுறுத்தலுக்குரிய சப்தத்தைக் கேட்டால் உதவியையும் பாதுகாப்பையும் அல்லாஹ்விடமே வேண்ட வேண்டும். அப்படித்தான் ஹாஜர் அவர்களும் நடந்துள்ளார்கள்.
6. அல்லாஹ் இப்றாஹீம் (அலை) குடும்பத்தை தூதுத்துவப் பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளான். அவர்களது சந்ததிகளில் இறைத்தூதர்களை ஏற்படுத்தினான். இங்ஙனம் இருக்க உலகத் தேவைகளுக்காக வாழும் ஒருத்தியை எப்படி தன் மகன் இஸ்மாயீலு(அலை)க்கு மனைவியாக இருக்க அவரது தந்தையாகிய இப்றாஹீம்(அலை) விரும்புவார்? அவளோ, தன் கணவனின் தந்தை விருந்தாளியாக வந்த போது புறக்கணித்தாள். அல்லாஹ் அவளுக்குச் செய்த அருளுக்காக நன்றி செலுத்தாமல் நன்றி கொன்றாள். ஆதலால், இவளை மனைவியாக வைத்துக் கொள்ளவேண்டாம் என்று தன் மகனுக்கு அறிவுறுத்தினார்.
7. இஸ்மாயீல்(அலை)க்கு வாழ்க்கைப்பட்ட இரண்டாவது மனைவி நல்லவள். அவளோ விருந்தாளியையும் கவுரவித்தாள். அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி பாராட்டினாள். ஆதலால் இவளையே மனைவியாக வைத்துக் கொண்டு அவளை பராமரித்துக் கொள்ளுமாறு தன் மகனுக்கு அறிவுறுத்தினார். கெட்டவளை மனைவியாக வைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் நல்லவளையே மனைவியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் இப்றாஹீம் (அலை) தன் மகன் இஸ்மாயீலு(அலை)க்கு அறிவுறுத்தியது ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு துணையை தேர்ந்தெடுக்கும் போது இதை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்பதை வயுறுத்துகிறது.
8. கட்டுப்படுதலும் பொறுமையும் வரவேற்கப்படும் பண்புகளாகும். அதுதான் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் ஹாஜரும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் தங்கியது பின்னாளில் பாதுகாக்கப்பட்ட அபயமளிக்கும் புண்ணிய பூமியாக ஆனது. அங்குதான் ஸம்ஸம் தண்ணீரும் உலகத்திலுள்ள அனைத்து கனி வகைகளும் கிடைக்கின்றன. உலக மக்கள் அனைவரும் அப்புண்ணிய பூமியை நோக்கி ஹஜ்ஜுக்காக சாரைசாரையாகச் செல்வது இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
0 comments:
Post a Comment