بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முன்னோர்கள் வாழ்வினிலே... பாகம் - 2

குகைவாசிகளும், கற்பாறையும் (தொடர்-2)
எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா
               உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர் பாராத விதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள்,நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக - துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்' என்று பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்;.
             இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன். வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலைமாட்டில் நின்று கொண்டேன். என் (தாய் தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந்தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாம்விட்டது. நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே செய்திருக்கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம். அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.
            மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார். இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி - முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரண்டு கால்களுக்கும் இடையே அமர்ந்தபோது அவள்,அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே' என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக! உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.
               மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார். இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு' என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். (அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எதுவரையென்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சுpல காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து,அல்லாஹ்வுக்கு அஞ்சு' என்று கூறினார். நான் அவரிடம்,அந்த மாடுகளிடமும் இடையர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்' என்றேன். அதற்கு அம்மனிதர்,அல்லாஹ்வுக்கு அஞ்சு என்னைப் பரிகாசம் செய்யாதே' என்று கூறினார். நான்,உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள்ளு என்று பதிலளித்தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக! (இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான். அவர்கள் வெளியே நடந்து சென்றார்கள் என நபபியவர்கள் கூற நான் கேட்டேன்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: புகாரி 2333)
                அன்புள்ள வாசக நெஞ்சங்களே! இவ்வரலாற்றை ஊன்றிப் படித்துப் பாருங்கள். எத்தனையோ பயன்பாட்டினையும், படிப்பினையையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
1.மனிதனாகப் பிறந்து விட்டால் துன்பமின்றி இவ்வுலகில் வாழவே முடியாது. முழுக்க முழுக்க இறைவனுடைய கண்காணிப்பிலும் அரவணைப்பிலும் இருந்து வந்த அவனது தூதர்கள் கூட கஷ்டத்திற்கும், துன்பத்திற்கும் அப்பாற்பட்டு வாழ்ந்ததே இல்லை. வாழவும் முடியாது. அந்த நேரங்களிலெல்லாம் அம் மாமனிதர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். தங்களைப் படைத்தவனிடமே அவர்கள் முறையிட்டார்கள். ஆதலால் அதிலிருந்து அவர்களுக்கு விடுதலையும் கிடைத்தது. ஆதற்கு அநேக சான்றுகளை குர்ஆனிலும் பார்க்கலாம். மனிதனால்; கற்பனையில் கூட எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றான குழந்தையை வழங்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரம் சொந்தம். இத்தகைய குழந்தைப் பாக்கியம் இழந்த நபி இப்ராஹிம் (அலை), ஜகரிய்யா(அலை) ஆகியோர் அல்லாஹ்விடம்தானே முறையிட்டார்கள். பார்க்க அல்குர்ஆன் 15:52 முதல் 56 வரை, 37:101,102, 51:28 ஆகிய வசனங்களில் இப்ராஹிம் (அலை) அவர்களைப் பற்றியும், நபி ஜகரிய்யா (அலை) அவர்களைப் பற்றி மர்யம் அத்தியாயத்தின் துவக்கத்திலும் பாருங்கள்.
                இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத நமது சமூகத்தினர் அல்லாஹ் அல்லாதாரிடம் குழந்தைப் பாக்கியம் உட்பட அனைத்தையும் கேட்டுப் பெறுகின்றனர். இது எந்த வகையில் நியாயம்?
இதோ அல்லாஹ் கூறுகிறான்.
               விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் வஸீலா தேடுங்கள். அவனது வழியில் அறப்போர் புரியுங்கள். நீங்கள் வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 5:35)
                    நாம் அன்றாடம் எத்தனையோ நல்லறங்களைப் புரிகிறோம். அவைகளைப் பொருட்டாக்கி அல்லாஹ்விடம் கேட்பதை இங்கு வலியுறுத்துகிறான்.
                   நபி (ஸல்) அவர்களும் தமது அமுத வாக்கில் அருளினார்கள். நீ அல்லாஹ்விடம் பேணுதலாக நடந்து கொள் அவன் உம்மைப் பேணிப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்விடம் பேணுதலாக நடந்து கொள். அவனை உமக்கு முன்னால் பெற்றுக் கொள்வாய். நல்ல செழிப்பான நிலையில் அவனை அறிந்து செயல்படு கஷ்டத்தில் உம்மை அவன் அறிந்து கொள்வான்
(நூல்: திர்மிதி)
                    நம்மவர்களின் நிலையோ இதற்கு நேர்மாற்றமாக இருப்பதைக் காண்கிறோம். வுசதியான வளமான வாழ்க்கையில் அல்லாஹ்வை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள். ஆனால் குகைத்தோழர்கள் தங்கள் தங்களுக்கு வாய்த்த ஆரோக்கியமான நேரங்களில் அவனைத்தான்; நினைவு கூர்ந்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
2.ஒரு முஸ்லிம் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடம்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக தனக்கு ஏற்பட்ட இடுக்கண்களை களையவும் அவனிடமே கையேந்த வேண்டும். இறந்தவர்களிடம் நமது தேவையைக் கேட்பது அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத இணைவைத்தல் என்ற குற்றமாகும். அல்லாஹ் தஆலா கூறுகிறான்.
                உனக்கு எந்தப் பயனும், தீமையையும் அளிக்காத அல்லாஹ் அல்லாதாரைப் பிரார்த்திக்காதே அப்படி நீ நடந்து கொண்டால் நிச்சயமாக நீ அக்கிரமக்கார (இணைவைத்தவ)ர்களில் ஒருவனாகிவிடுவாய் (அல்குர்ஆன் 10:106)
             அல்லாஹ் இணைவைத்தலை அக்கிரமம் என்றே குறிப்பிடுகிறான். (லுக்மான் என்ற அறிஞர் தம் மகனிடம் கூறினார். பார்க்க (அல்குர்ஆன் 31:13)
3.அல்லாஹ்விடம்தான் நல்லறங்களைக் கொண்டு வஸீலா தேட வேண்டும். இதுவே பயனளிக்கின்ற ஒன்றாகும். குறிப்பாக கஷ்ட காலத்தில் அத்தியாவசியமானதாகும். ஆனால் அல்லாஹ் அல்லாதவற்றையோ, ஏனைய பொருட்கள, பதவி போன்றவற்றையோ வஸீலாவாக ஆக்கிக் கொள்வது எந்த வகையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.
4.தன்னை விடவும், தனது குடும்பம், உற்றார், உறவினரை விடவும் தான் நேசிக்கினற அனைத்தையும் விடவும் அல்லாஹ்வுடைய நேசத்திற்;கே ஒருவன் முதலிடமளிக்க வேண்டும். இதுவே ஒரு உண்மை விசுவாசியின் இலக்கணமாகும். மனிதனாக இருந்தால் மண்ணாசை, பெண்ணாசை இருக்கத்தான் செய்யும். இதில யாரும் விதிவிலக்கானவர்களல்லர். ஆனாலும் அக்குகைவாசிகளில் ஒருவர் அழகான மங்கையொருத்தியைத் தவறான முறையில் அனுபவிக்காமல் அல்லாஹ்வுக்காக விட்டு விட்டதைப் பார்க்கிறோம்.
5.அல்லாஹ்தஆலாவை பயந்தவனாக யார் தனக்கு கிடைத்த கெட்ட வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறானோ அதாவது விபச்சாரம் செய்யாமல் விட்டுவிடுகிறானோ, நிச்சயமாக அவன் அல்லாஹ்வால் துன்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவான்.
6. யார் வேலையாட்களின் உரிமைகளைப் பேணி நடக்கிறார்களோ, அவரை கஷ்ட நிலையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றி வேலையாளின் கூலியை முறையாக உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் அதைத் தாமதப்படுத்துவது கூடாது.
             நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.வேலையாளின் வியர்வை உலர்வதற்கு முன் அவனது கூலியை வழங்கி விடுங்கள். (நூல்: இப்னுமாஜா)
          ஆனால் அவனே கூலியைப் பெறாமல் விட்டுச் சென்று விட்டால் அல்லது தாமதப்படுத்தினால் அதை ஆகுமான வழிகளில் பெருக்குவது சாலச் சிறந்ததே.
7.நாம் செய்த நல்லறங்களைக் கூறி அல்லாஹ்விடம் முறையிட்டோமானால் அல்லாஹ் தமது கஷ்டங்களை சிரமங்களை நீக்குகிறான்.
8.மனைவி, மக்கள் அனைத்தையும் விட தாய் தந்தையர்களுக்குப் பணிவிடை செய்வது அவர்களைக் கண்ணியப்படுத்துவது சிறந்த செயலாகும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதில்தான் சுவர்க்கமிருக்கிறது.
9.முன்னவர்களின் நடைமுறையை அல்லாஹ்தஆலா அல்லது நபி (ஸல்) அவர்களோ நமக்கு புகழ்ந்து கூறினால் அது நாமும் ஏற்றுச் செயல்பட வேண்டிய மார்க்கமாகும். இந்த வரலாற்றை நமக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
10. நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் எல்லாம் அல்லாஹ்வுக்காக என்றாகும்போதுதான் அதற்கான கூலி அல்லாஹ்விடம் கிடைக்கும். எனவே அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மை(இக்லாஸ்) எல்லோரிடமும் இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும். இப்படித்தான் அம்மூவரும் கூறினார்கள்.
             அல்லாஹ்வே! உனது திருமுகத்தைத்தேடி இதை நான் செய்திருப்பேனேயானால் நாங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து எங்களை விடுவிப்பாயாக என்று.
11.உவமானத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவனாக உள்ள அல்லாஹ்வுக்கு முகம் உண்டு எனவும் இது நமக்குணர்த்துகிறது.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்.)



Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment