بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பிரார்த்தனையின் ஒழுங்குகள்;


பிரார்த்தனையின் ஒழுங்குகள்;
முஹிப்புல்லாஹ் உமரீ

                அல்லாஹ் நமக்கு சமீபத்தில் இருக்கின்றான் என்றும் அவனது அருளிலும் நிராசையடையாது பிரார்த்தனை செய்யும் பொழுது நமது கோரிக்கைகள் இறைவனால் ஏற்கப்படும் ஏனெனில் ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ(ரலி) நூல்: அஹ்மத்,அபூதாவூத்


அதே நேரத்ததில் அதற்கு சில ஒழுங்களும் இருக்கின்றன.
ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்:
நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில் யாஅல்லாஹ்! யாஅல்லாஹ்! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1686

மார்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்கின்றோம். ஆகவே நமது துஆ அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் பொருளீட்டுவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

அவசரப்படக் கூடாது:
நான் பிரார்த்தனை செய்தேன். அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 6340
பாவமானதைக் கேட்கக் கூடாது:
பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 4918
மரணத்தைக் கேட்கக் கூடாது: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்றிருந்தால், இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக! என்று கேட்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி 5671
இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்:
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்கஇரக்கமுடையவன்,கிருபைமிக்கவன் என்றும்(பிரார்த்தித்துக்)கூறுவர்.
(அல்குர்ஆன்59:10)
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 3084
வலியுறுத்திக் கேட்க வேண்டும்:
நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 6338
அனைத்தையும் கேட்க வேண்டும்:
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும். அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).(அவர்) கூறினார்; என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன. என் தலையும் தரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாக் போய்விடவில்லை. 
(அல்குர்ஆன் 19: 2,3,4)
சின்ன விஷயம், பெரிய விஷயம் என்று பார்க்காமல் எல்லாத்தையும் கேளுங்கள் அவனிடம் கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை.
இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல்:
(முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.   
(அல்குர்ஆன் 7: 55)
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும்,மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.  
 (அல்குர்ஆன் 7: 205)
மேற்கூறப்பட்டுள்ள வசனத்திலிருந்து துஆ கேட்பதின் ஒழுங்கு கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பதும் அதற்கு பின்னால் உள்ளவர்கள் சப்தமாக ஆமீன் கூறுவது முறையான பிரார்த்தனை இல்லை என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இரவின் கடைசி நேரம்: நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1145
ஸஜ்தாவின் போது..:
அடியான் அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 744
மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்டும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபு தர்தா(ரலி) நூல்: முஸ்லிம் 4912
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ: மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. புhதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.    
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி 1828
பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்..: பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். ஆவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! ஏன்றனர். ஆதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 10709
மேற்கூறப்பட்டுள்ள துஆக்களின் ஒழுங்குகளைப் பேணி நடந்தால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள் புரிவானாக!

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment